“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
இனி துரைமுருகனுக்கு கட்சி பொறுப்பு மட்டுமே வகிப்பார் என்றும் அவருக்கு பதிலாக துரைமுகனின் மகன் கதிர் ஆனந்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி கடந்த 27ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த நிலையில், தன்னுடைய பெற்றோரான முதல்வர் மு.க.ஸ்டாலின் – துர்கா தம்பதியிடம் சென்று ஆசி பெற்றவர், சி.ஐ.டி காலனியில் இருக்கும் இராஜாத்தி அம்மாள் வீட்டிற்கு சென்றும் வாழ்த்து பெற்றார்.
துரைமுருகன் வீட்டிற்கு செல்லாத உதயநிதி
இப்படியான சூழலில், அடுத்து தனது வீட்டிற்குதான் உதயநிதி வருவார் என்று கோட்டூர்புரம் இல்லத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்த திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காத்திருந்து, காத்திருந்து நேரங்கள் ஓடியதே தவிர உதயநிதி துரைமுருகனை பார்த்து, வாழ்த்து வாங்க ஓடோடி வரவில்லை. இதனால், வருத்தத்தில் இருந்த துரைமுருகன், குறிஞ்சி இல்லத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து கோட்டூர்புரம் வரும் திட்டம் ஏதும் உதயநிதிக்கு இருக்கிறதா அல்லது இல்லையா? என்று விசாரித்துள்ளார். அப்படியான திட்டம் எதுவுமே இல்லை என்ற பதில் குறிஞ்சி இல்லத் தரப்பில் இருந்து வந்ததும் துரைமுருகனின் முகம் வெளிறிப்போய்விட்டதாம்.
துணை முதலமைச்சரானபோது சென்ற உதயநிதி, இப்போது வராததது ஏன் ?
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அறிவிக்கப்பட்டபோது துரைமுருகன் இல்லம் தேடிச் சென்று வாழ்த்து பெற்ற உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனபின்னர், துரைமுருகனை கண்டுகொள்வதே இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமாக, துரைமுருகனின் செயல்பாடுகளே அமைந்துள்ளதாகவும் தனக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்க திமுக தலைவர் நினைத்தப்போது, அதற்கு சம்மதம் தெரிவிக்க தொடக்கத்தில் துரைமுருகன் யோசித்ததும், கட்சி, ஆட்சி இரண்டிலுமே அவரின் தற்போதைய செயல்பாடுகள் திருப்தி அளிக்காத காரணத்தினாலேயே, உதயநிதி கோட்டூர்புரம் செல்லாமல் தவிர்த்ததற்கு காரணம் என திமுக வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
வேறு வழியில்லை – ஓடோடி வந்த துரைமுருகன்
இந்நிலையில், வேறு வழியின்றி உதயநிதிக்கு தானே சென்று வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் துரைமுருகனுக்கு வந்துள்ளது. அதனால், குறிஞ்சி இல்லத்திற்கே ஓடோடி வந்த துரைமுருகன், கூட்டத்தோடு கூட்டமாக உதயநிதிக்கு மேடையில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போதும் கூட உதயநிதி அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மற்ற நிர்வாகிகள், அமைச்சர்களிடம் எப்படி வாழ்த்தை பெற்றாரோ அதே ரீதியில்தான் துரைமுருகனிடமும் வாழ்த்து பெற்றார் உதயநிதி.
மேடையிலும் கூட சிறிது நேரமே நின்ற துரைமுருகன், பெரிதாக உதயநிதியிடம் எதுவும் பேசாமல், புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்துவிட்டு சென்றியிருக்கிறார்.
2026ல் துரைமுருகனுக்கு சீட் இல்லையா ?
இளைஞர்களுக்கு சீனியர்கள் வழிவிட வேண்டும் என்று ரஜினி பேசிய வார்த்தைகளை பின்பற்றி தன்னுடைய இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி பேசிய நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் மூத்த நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வனத்துறை அமைச்சர் பொன்முடி கூட தனக்கு சீட் கிடைக்குமா என்று தெரியவில்லை என்று ஓபனாக பேசிய நிலையில், அதே நிலையை துரைமுருகனும் எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இனி துரைமுருகனுக்கு கட்சி பொறுப்பு மட்டுமே தரப்படும் என்றும் அவருக்கு பதிலாக துரைமுகனின் மகன் கதிர் ஆனந்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.