(Source: ECI/ABP News/ABP Majha)
வாரிசு அரசியல் பற்றி பேசும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய துரைமுருகன் - என்ன பேசினார்?
கடந்த தேர்தலில் கொஞ்சம் தில்லுமுல்லுகளும் துரோகங்களும் நடந்து விட்டது. நான் கவலைப்படவில்லை எனக்கு உண்மையான தியாகம் புரிகிற உண்மையான கட்சிக்காரன் இருந்தால் போதும்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்
பாஜக கொள்கையை பற்றி பேசாமல் வாரிசு அரசியலை சொல்லி தேர்தலை சந்தித்து வருகிறது. நான் கேட்கிறேன் வாரிசு என்றால் என்ன ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார் அவர் ஆணாக இருந்தால் பிள்ளை பெற்றுக் கொள்கிறார். அவன் அவனது அப்பா போல் அரசியலுக்கு வந்தால் அது வாரிசு அரசியலா? சில பேர் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேங்கிறாங்க அதற்கு நாங்கள் என்ன செய்வது. வாரிசாக இருக்கலாம் தவறில்லை ஆனால் அவன் வார்த்தெடுத்த சிற்பம் போல் தியாகத் தழும்பேறியவனாக இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு குடும்பம் என்ன உங்களைப் போன்ற குடும்பமா? நடுத்தெரு நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா அவர்கள். நேருவின் வீட்டில் நேருவிற்காக நான்கு வாசலில் நான்கு கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் அவ்வளவு செல்வாக்கோடு வளர்ந்தவர் பத்து சிறைகளில் 16 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தவர் நேரு,
கலைஞர் 6 மாத காலம் கடுங்காவல் சிறை தண்டனை
அவருக்குப் பிறந்த மகளை துப்பாக்கியில் சுட்டானே பாதுகாப்பு வீரன் மண்ணில் ரத்தம் சிந்தி தியாகம் புரிந்தார் அவர், அவரது மகன் தேர்தலுக்காக வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வைத்து சுக்கு நூறாக சிதறடிக்கப்பட்டானே. இதெல்லாம் நடந்த போதும் கூட சோனியா காந்தியின் மூத்த மகன் விமான விபத்திலே இறந்து போய் குடும்பமே சிதைந்து போனதே இதெல்லாம் வாரிசு அரசியலா? அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் மகத்தானே வெற்றியை பெற்று சோனியாவை பிரதமராக்குவோம் என்று நின்ற போது பிரதமராக எனக்கு வேண்டாம் என்றாரே அது தியாகம் அல்லவா? இப்போதெல்லாம் பஞ்சாயத்து போர்டு கவுன்சிலர் என்றாலே விடமாட்டேங்குறாங்க அன்றைக்கு பிரதமர் பதவியே வேண்டாம் என்றாரே சோனியா. இதற்கெல்லாம் மேலாக எங்கள் தலைவர் கலைஞர் பாம்புக்கும், கீரிக்கும் நடுவில் போராடவில்லையா? தண்டவாளத்தில் தலை வைக்கவில்லையா? ஆறு மாத காலம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவில்லையா? அவர் பெற்ற மகன் மிசாவில் என்ன ஆனார் கொஞ்சம் விட்டிருந்தால் கொண்டே போட்டிருப்பார்கள். அப்படி தியாகம் செய்து இன்றைக்கு தமிழக முதல்வராக உள்ளார். மிசாவில் கலைஞர் கைதானபோது அவருடன் போனால் வாழைப்பழம் கூட வாங்கித் தர மாட்டார் என நான் இங்கு வந்து விட்டேன்.
நமக்குள் என்ன சண்டை டெண்டரை நான் எடுப்பதா நீ எடுப்பதா
அந்த மாதிரி தியாகம் செய்தவர்கள் உங்கள் கட்சியில் இருந்தார்களா? இருந்தார்கள் நான் மிசாவில் இருந்தபோது வாஜ்பாய் இருந்தார் அதற்குப் பிறகு யாராவது இருந்தார்களா? மோடி இருந்தாரா? அமித்ஷா இருந்தாரா? என கேள்வி எழுப்பினார். தியாகம் என்பது என்னவென்றால் அத்தை மகள் சொத்தோடு வரும்போது, வெறுமனே வரும் காதலித்தவளை ஏற்றுக்கொள்வதும், ஹாஸ்டலில் சூடான இட்லி கொடுப்பார்கள் ஆனால் தட்டில் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்வது தான் தியாகம். நான் பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறேன் மிகப்பெரியவர். அவர் வாயில் இருந்தா தேர்தலுக்குப் பிறகு திமுக ஒளிந்து விடும் என வருவது. பத்தாண்டு காலம் நாம் வனவாசத்தில் இருந்தோம். யாரும் பஞ்சாயத்து போர்டில் கிடையாது, தலைவர் கிடையாது, எதிலும் கிடையாது ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு பொறுப்பிலும் ஊருக்கு ஊரு தலைவர், கவுன்சிலர் இது நாம் ஆட்சிக்கு வந்ததால் தான் சாத்தியம். ஆனால் இப்போது நமக்குள் என்ன சண்டை டெண்டரை நான் எடுப்பதா நீ எடுப்பதா என்றா? இல்லை என் பெயரில் எடுப்பதா உன் பேரில் எடுப்பது என்பது தானே சண்டை.
நாற்பதிலும் திமுக வெற்றி
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த தொகுதியில் உள்ளேன் ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும். இது போன்ற சண்டைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். 10 ஆண்டுக்குப் பிறகுதான் நாம் கலெக்டர் ஆபீஸ், யூனியன் ஆபீசை எட்டிப் பார்க்கிறோம் இன்னும் நாம் புல் ஆகவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தல், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அளவுகோலாக அமையும். போன முறை ஒன்றை விட்டு விட்டோம் இந்த முறை 39-யும் நாம் வெற்றி பெற்று காட்ட வேண்டும். பாண்டிச்சேரியை அடித்து சொல்கிறேன் அதில் திமுக தான் உறுதியாக வெற்றி பெறும். ஆக நாற்பதிலும் திமுக வெற்றி என்று சொன்னால் அடுத்த முறை கூட்டணிகள் சிதறிப்போகும் அதிகமானோர் நம்மிடம் வர காத்துக் கிடப்பார்கள். இதில் நாம் கொஞ்சம் விட்டு விட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் நம்மை கொட்டி பார்க்கும் தைரியம் அவர்களுக்கு வரும். அதற்குப் பிறகு மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பஞ்சாயத்து போர்டு தலைவர் இல்லை பஞ்சாயத்து போர்டு யூனியன் இல்லை எதுவும் இல்லை. ஆக இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் உள்ளது. கடந்த தேர்தலில் கொஞ்சம் தில்லுமுல்லுகளும் துரோகங்களும் நடந்து விட்டது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு உண்மையான தியாகம் புரிகிற உண்மையான கட்சிக்காரன் ஊருக்கு பத்து பேர் இருந்தால் போதும் இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்யும் சாமர்த்தியம் எனக்கு உண்டு.
வீரனாக ஒருவன் இருந்தால் போதும்
உங்களால் உருவாக்கப்பட்ட நான் இந்த பகுதியில் அரை டவுசர் ரோடு சுற்றித்திரிந்து, மூன்று வேலையும் கூழ் குடித்து வளர்ந்த நான் இன்றைக்கு 2 கோடி தொண்டர்களைக் கொண்ட திமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருக்கிறேன். இது உங்களால் மட்டுமே சாத்தியம். அறிவாலயத்தில் அண்ணா நாவலர் பேராசிரியருக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற இடத்தில் உங்களால் உருவாக்கப்பட்ட இந்த துரைமுருகனின் போட்டோவும் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது என உருக்கமாக பேசினார். நீங்கள் கொஞ்சம் லெத்தாஜியாக தான் இருக்கிறீர்கள் என கேள்விப்பட்டேன். எலக்சன் ஸ்பிரீட்டில் நீங்கள் இல்லை. யார் சரியாக இல்லையோ அவர்களை எடுத்து விடுவேன் நான் யாரையும் கேட்க வேண்டியது இல்லை. ஏன்னா நான் தான் பொதுச்செயலாளர் மறுநாள் கட்டம் கட்டி விடுவேன். ஐந்து பேர் ஒழுங்காக இருந்தால் போதும் மற்றவர்களை தூக்கி எறிந்து விடுவேன். வீரனாக ஒருவன் இருந்தால் போதும் கோழையாக 30 பேர் தேவையில்லை. நான் கட்டன் ரைட்டாக பார்ப்பேன் தேர்தல் முடியும் வரை இங்கே தான் இருப்பேன். சரியாக இருந்தால் விட்டேன் சரியில்லை என்றால் அவர்களையும் தூக்கி விடுவேன் இவர்களையும் தூக்கி விடுவேன். கட்சி தான் முதலில் என மிக காட்டமக பேசினார் துரைமுருகன்.