(Source: ECI/ABP News/ABP Majha)
இந்தியாவிலேயே தமிழகம்தான் பாதுகாப்பாக உள்ளது - வைகோ
தமிழ்நாட்டில் தமிழை பற்றி பேசினால் தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என கருதி தமிழை பற்றி பேசுகிறார்கள்.
பேரறிஞர் அண்ணா 115 ஆவது பிறந்தநாள் திறந்தவெளி மாநாடு மதுரையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டையில் மதிமுக மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே எம் ஏ நிஜாம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், "தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஸ்டெர்லைட், கூடங்குளம், முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆகியவற்றை எதிர்த்து போராடி நீதிமன்ற வரை சென்று வெற்றி பெற்ற இயக்கம் மதிமுக. மதிமுக இந்த நாட்டுக்கு என்ன செய்தது என கேட்டால் யாரும் செய்ய முடியாத ஸ்டெர்லைட்டை போராடி அகற்றியது தான். தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காப்பதற்கு மதிமுக பாடுபட்டதை போல எந்த கட்சியும் போராடியது இல்லை. அப்படிப்பட்ட மதிமுக அரசியல் ரீதியாக ஒரு முடிவுக்கு வருகிறது. திமுக தலைமையில் தான் தமிழகம் இருக்க வேண்டும், திராவிட மாடல் ஆட்சி தான் நீடிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இங்கு ஆரியா வர்க்கத்தை கொண்டு வந்து நிலை நாட்டிவிடலாம் என்று ஆளுனர் ரவி துடிக்கிறார். பொய்களை அள்ளி வீசுகிறார். தமிழ் மீது இதுவரை இல்லாத காதல் அவருக்கும் அமித் ஷாவிற்கும் வந்துவிட்டதாம். இவர்களெல்லாம் எங்கே போனார்கள் தமிழை பற்றி பேசுவதற்கு.
பிரதமர் மோடி என்றைக்கு தமிழை பற்றி பேசினார். இவர்களெல்லாம் தமிழ்நாட்டில் தமிழை பற்றி பேசினால் தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என கருதி தமிழை பற்றி பேசுகிறார்கள். தமிழை பற்றி பேசுவது மட்டுமல்ல அவர்கள் சனாதன தர்மம் தான் இந்தியா, இந்தியா என்று ஒரு நாடே கிடையாது என சனாதன தர்மத்தின் பிரதிபலிப்பு தான் இந்தியா என்று ஆளுனர் ரவி துணிச்சலாக அகந்தையோடு பேசுகிறார். நீங்கள் ஒன்றை எண்ணி பார்க்க வேண்டும், சனாதன தர்மத்திற்கும், திராவிடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தனித்தனி தேசங்களாக இருந்தன. 56 தேசங்கள் என்று சொல்லும் அளவிற்கு இருந்தன. அதன் பின் இந்தியா என்ற தேசத்தை வெள்ளைக்காரன் உருவாக்கிவிட்டு போனானே தவிர அதனால் தான் நான் சொன்னேன், இந்திய ஐக்கிய நாடுகள் என்று நாடாளுமன்றத்திலே நான் கூறினேன், இதையெல்லாம் நான் கூறுவதற்கு காரணம் என்றுமில்லாத ஆபத்து நம்மை சூழ்ந்து வருகிறது. தமிழைச் சொல்லி ஆரியா வர்த்தத்தை, சனாதனத்தை, இந்துத்துவா கொள்கைகளை இங்கு நிலை நாட்டி விடலாம் என்று அதற்கு ஒரு ஏஜெண்டாக, எடுபிடியாக கவர்னரை அனுப்பி வைத்துள்ளனர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நடேசனார், அண்ணா வழியில் கலைஞர் ஆகியோர் தமிழர்களையும் திராவிடக் கொள்கைகளையும் பாதுகாத்தனர். ஆனால் இன்று திராவிட கொள்கையை அழிக்க நினைக்கிறார்கள். திராவிடம் என்பது வரலாறு, திராவிடம் என்பது கொள்கை. அது ஒரு தத்துவம், திராவிடம் என்பது தமிழர்கள் சரித்திரம், இதை யாராலும் அழிக்க முடியாது. இதனை பாதுகாக்கவே மதிமுக திமுகவுடன் கரம் கோர்த்துள்ளது. தமிழகத்தில் திமுக திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறது. இது போன்ற ஆட்சியை நடத்த முடியவில்லை என்று இந்தியாவில் மற்ற மாநிலங்கள் துடிதுடித்து வருகின்றன. மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை இது குறித்து மத்திய அரசு வாய் திறக்கவில்லை. இரண்டு இனத்திற்கு இடையே பகையை மூட்டி விட்டு வடக்கு பகுதியில் பாஜக காலூன்ற துடிக்கிறது. நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகம் தான் பாதுகாப்பாக உள்ளது, திராவிட இயக்கம் தான் பாதுகாப்பாக இருக்கிறது. இதற்கு திராவிட மாடல் ஆட்சி நடத்தும் மு க ஸ்டாலின் தான், அதற்கு பாதுகாப்பாக இருக்கிறார். திமுகவை நீங்கள் எதிர்த்தீர்கள் தற்போது கரம் கோர்த்து கூட்டு வைத்தீர்கள் என்றால் உண்மை தான். ஒரு கட்டத்தில் பெரியார் திராவிட கழகத்தில் இருந்து கொண்டு கண்ணீர் துளி பசங்கள் என்று திராவிட முன்னேற்றக்கழகத்தினரை கடுமையாக விமர்சித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தினரும் தந்தை பெரியாரை மேடை தோறும் விமர்சித்தனர். அண்ணா ஒருவர் தான் விமர்சிக்கவில்லை, ஆனால் திராவிடர் கழகம் எப்பொழுது திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து தேர்தல் களத்தில் நின்று போராடியதன் பிறகு திமுக 138 இடங்களை பெற்று 1967 இல் ஆட்சி பீடத்திற்கு வந்த உடன் திருச்சிக்கு செல்க என்று கலைஞரையும், நாவலரையும், அன்பில் தர்மலிங்கத்தையும் உடன் அழைத்து கொண்டு தந்தை பெரியார் இருக்கிற இடத்திற்கே சென்ற பொழுது அவர் வெட்கப்பட்டு போனேன் என்று சொல்லும் அளவிற்கு எந்த தலைவன் உருவாகினானோ அந்த தலைவனிடத்திலேயே இனி தமிழகத்திற்கு எது நல்லது என பெரியார் இடத்திற்கே சென்று அவரின் ஆதரவோடு ஆட்சி நடத்தினார்கள். அதைப்போல தான் மதிமுகவும் திமுகவை இன்றைக்கு ஆதரிக்கிறது" என்றார்.