Anbumani Ramadoss:"அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைபிடிக்கவில்லை" - அன்புமணி ராமதாஸ்
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் தர வேண்டும் என்று கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாமக வாக்குசாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "மேட்டூர் அணையை தூர்வாரி 20 டிஎம்சி நீர் கூடுதலாக சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டாவில் 2 லட்சம் ஏக்கர் குறுவை விவசாய நிலம் கருகிக் கொண்டிருக்கிறது. காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான வழக்கு 21 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக வரும் திங்கட்கிழமையே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றார். மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் புகை ஈரச்சாம்பலால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் ரசாயன கழிவுகள் மழை காலங்களில் நேரடியாக காவிரியில் நேரடியாக கலக்கிறது. இந்தப் பகுதியில் தமிழக அரசு மருத்துவ ஆய்வுகள் நடத்தி தீர்வு காண வேண்டும். அதேபோல், நெய்வேலியிலும் பாதிப்பு உள்ளது. இதனைக் கண்டு கொள்ளாமல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தூங்கி கொண்டிருக்கிறது" என்றார்.
"தொப்பூர் கணவாயில் முக்கால் கி.மீ தூரத்திற்கு ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர். தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் தர வேண்டும். இனியும் முதலமைச்சர் மவுனம் சாதிக்கக் கூடாது. காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் அனைத்து கட்சியும் ஒற்றுமையாக உள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. மேட்டூர் உபரி நீர் திட்டத்தினால் டெல்டா விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காவிரி நீர் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. மேட்டூர் உபரிநீர் திட்டம் குறித்து பி.ஆர்.பாண்டியன் நடத்தும் ஆர்ப்பாட்டம் அர்த்தமற்றது.
விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் என்எல்சியை கண்டித்து நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் விளை நிலங்களை அபகரிப்பதை எதிர்த்து போராடாமல் உபரி நீர் திட்டத்தை எதிர்த்து போராடுவதா?" என கேள்வி எழுப்பினர்.
மேலும், "அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரத் என இரண்டும் உள்ளது. எனவே, அரசு இது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கட்டும். அதன் பிறகு பாமகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கும். நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளது, சனாதனம் தான் பெரிய பிரச்சினையா? குறுவை சாகுபடிக்கு போதுமான நீர் கிடைக்காத நேரத்தில் மேட்டூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை எடுப்பதை அனுமதிக்க கூடாது. தமிழகத்தில் இளைஞர்களை மது, சூது போதை உள்ளிட்டவைகளால் அச்சுறுத்தி வருகிறது.
எனவே, போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மது ஒழிப்பு குறித்து பாமக போராடவில்லை எனில் தமிழ்நாடு எப்போதோ குடிகார நாடாகிருக்கும். அண்ணாவின் கொள்கைகளை திமுக கடைபிடிக்கவில்லை. முதலமைச்சர் ஆனதும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி முதல் கையொப்பம் இடுவதாக பேசிவிட்டு தற்போது இதுவரை அவர் அது குறித்து பேசவில்லை” என்று கூறினார்.