DMK District Secretary Meeting : ‘அறிவாலயத்திற்கு பதில் அக்கார்ட் ஹோட்டல்’ திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கான இடம் மாற்றப்பட்டது ஏன்..?
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் ஹோட்டல் அக்கார்டு திமுக எம்.பி ஜெகத்ரட்சனுக்கு சொந்தமானது.
வரும் 26ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அறிவாலயத்திற்கு பதில் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்ட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
’அறிவாலயத்திற்கு பதில் அக்கார்டு’
பொதுவாக திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட முக்கிய கூட்டங்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். பொதுக்குழு போன்ற ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்கும் கூட்டங்கள் மட்டுமே வேறு இடத்தில் நடத்தப்படும். ஆனால், இந்த முறை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமே அக்கார்டு ஹோட்டலில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
துரைமுருகன் கொடுத்த அறிக்கையில் தெரிவித்தது என்ன?
பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், இளைஞரணி 2வது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பணிகள் தொடர்பாக விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அறிவாலயத்திற்கு பதில் ஏன் அக்கார்டு ஹோட்டலில் கூட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்தையும், எதற்காக திமுக தலையகத்திற்கு பதில் ஹோட்டல் அக்கார்டுக்கு வரவேண்டும் என்பதையும் துரைமுருகன் தன்னுடைய அறிக்கையில் தெரிவிக்கவில்லை
அறிவாலயமே வீடாக, வீடே அறிவாலயமாக இருந்த கலைஞர்
கலைஞர் கருணாநிதி ஆக்டிவாக அரசியல் செய்தபோதும் சரி உடல்நிலை சரியில்லாமல் போனபோதும் சரி, அவர் அறிவாலயம் செல்வதை தன் அன்றாட வாழ்வியலாக வைத்திருந்தார். அவர் வீட்டில் இருப்பதை காட்டிலும் அறிவாலயத்தில் இருந்த நாட்களே அதிகம் என உடன்பிறப்புகளே சொல்லி சிலாகிப்பர். கருணாநிதி வீட்டிலேயே முடக்கிபோனபோது கூட அவரை மு.க.ஸ்டாலின் அறிவாலயம் கூட்டிச் சென்று காட்டியபோது அவர் உணர்வுகளிலும் உடம்பிலும் முன்னேற்றமும் புதிய உத்வேகமும் ஏற்பட்டதாக அன்றைய நாட்களில் ஸ்டாலினே சொல்லியிருக்கிறார். திமுக செயல் தலைவராகவும் கலைஞர் கருணாநிதி இறப்பிற்கு பின்னர் தலைவராகவும் ஆன மு.க.ஸ்டாலினும் கலைஞர் பாணியை பின்பற்றி அறிவாலயம் தினமும் சென்று கட்சி பணிகளை செய்யத் தொடங்கினார்.
அறிவாலயத்திற்கு பதில் அக்கார்டு ? – ஏன் ? எதற்கு ?
இந்நிலையில், திமுக இளைஞரணி மாநாடு பொறுப்பாளர்கள் கூட்டம் மூத்த அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தலைமையிலும் வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நடக்கவுள்ளது.
திமுக தலைமையகமான அறிவாலயத்தில் சீரமைப்பு பணிகளும் புனரமைப்பு பணிகளும் நடைபெற்று வருவதால் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் பொங்கல் வரை அறிவாலயத்தில் கட்டட பணிகள் நடைபெறும் என்பதால் இந்த கூட்டத்தை அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஹோட்டல் அக்கார்டு யாருடையது தெரியுமா ?
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் ஹோட்டல் அக்கார்டு திமுக எம்.பி ஜெகத்ரட்சனுக்கு சொந்தமானது.