பெஸ்ட் புதுச்சேரி என்ற கருத்தளவிற்கு என்ன செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பிய திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.. சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு
பிரதமரின் பெஸ்ட் புதுச்சேரி என்ற கருத்தளவிற்கு என்ன செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பிய திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு
புதுச்சேரி: பிரதமரின் பெஸ்ட் புதுச்சேரி என்ற கருத்தளவிற்கு என்ன செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பிய திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரியில் 15வது சட்டப் பேரவையின் 2வது கூட்டம் 23ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டப்பட்டது. அவைக்கு வந்த பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட், பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கர் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்று இருக்கையில் அமர்ந்தனர். அதையடுத்து பேரவைத் தலைவர் செல்வம் அவையைத் தொடங்கினார். முதலில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, முன்னாள் எம்எல்ஏ பரசுராமன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் மறைந்தோருக்கும், பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோர் மறைவுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து பேச தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ஊதியம் போடமுடியாத நிலை உள்ளது, நீட் விலக்கு தொடர்பாக என்ன முடிவு எடுத்தீர்கள், பெஸ்ட் புதுச்சேரி என்ற பிரதமரின் கருத்துக்கு என்ன செய்துள்ளீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.இதற்கு பதிலளிக்க பேரவைத் தலைவர் செல்வம் முற்பட்ட போது குறுக்கிட்ட எதிர்க்காட்சித் தலைவர் சிவா, நாங்கள் உங்களை பேரவைத் தலைவராக நினைக்கிறோம். பாஜகவினராகவோ, அமைச்சராகவோ பேசாதீர்கள். அதிகாரிகள் அரசு கையில் இல்லை. மக்கள் பிரச்சினையை பேசினால் தான் அவர்கள் வேலை செய்வார்கள். ஒரு வாரமாவது பேரவையை நடத்துங்கள். புதுச்சேரியை நாசமாக்குகறீர்கள். பேரவைத் தலைவர் வேலையை மட்டும் பாருங்கள். எங்களுக்கும் சேர்த்து தான் நீங்கள் பேரவைத்தலைவர். பாஜகக்காரர் அல்ல. முதல்வரின் முதல் கோரி்க்கையே மாநில அந்தஸ்து தான். அதன் நிலை எப்படி இருக்கிறது.
"பெஸ்ட் புதுச்சேரி" பிரதமர் சொன்னது என்னவானது. நிர்வாகம் முடங்கியுள்ளது. தீபாவளி பொருட்கள் இன்னும் பல தொகுதிகளில் தர முடியவில்லை. சிறப்புக்கூறு திட்ட நிதி என்னவானது. என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தனர். இந்த நிலையில் சட்ட முன்வரைவு தொடர்பாக பேரவைத் தலைவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் கோரிக்கை பதாகைகளை தூக்கிக் கொண்டு பேரவை தலைவர் இருக்கையை திமுகவினர் முற்றுகையிட்டு விட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் வெளி நடப்பு செய்தனர். ஒட்டு மொத்தாமக புதுச்சேரி கூட்டத்தொடர் 20 நிமிடங்களில் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்