Pa Ranjith: மனிதாபிமானமற்ற செயல்களின் வேர்தான் சனாதனம்.. அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக களமிறங்கிய பா. ரஞ்சித்!
அயோத்தி சாமியார் ஒருவர், அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூபாய் 10 கோடி கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
கடந்த 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட திமுக இளைஞர் அணிச் செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பேசியிந்தார். இது பொது வெளியில் ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்களைக் கிளப்பியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள I.N.D.I.A. கூட்டணியில் சல்சலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த கூட்டணியில் முக்கியத் தலைவராக உள்ள மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்தி கிளம்பியது மட்டும் இல்லாமல், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் அமைச்சர் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டு எரித்து, காலால் மிதித்து தனது எதிர்ப்பினை தெரிவித்ததுடன், அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூபாய் 10 கோடி கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாணியில், ‘ 10 ரூபாய் சீப்பு இருந்தால் எனது தலையை நானே சீவிக்கொள்வேன்’ என பதிலளித்திருந்தார். இதன் பின்னர் அந்த சாமியார் ரூபாய் 10 கோடி போதவில்லை என்றால் அதற்கு மேலும் தரத் தயார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான பா. ரஞ்சித் தனது ட்விட்டர் தளத்தில் ஆதரவாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அமைச்சர் உதயநிதியின் சந்தான தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுக்கும் அறிக்கை பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் மனிதாபிமானமற்ற செயல்களின் வேர்கள் சனாதன தர்மத்தில் உள்ளது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அயோத்திதாஸ் பண்டிதர், தந்தை பெரியார், மகாத்மா பூலே, சாந்த் ரவிதாஸ் போன்ற ஜாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதையே வலியுறுத்தியுள்ளனர். அமைச்சரின் உரையை திரித்து இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் கேடுகெட்ட போக்கை ஏற்க முடியாது. அமைச்சரின் மீது அதிகரித்து வரும் வெறுப்பும் மிகவும் கவலையளிக்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் வார்த்தைகளுக்கு ஆதரவாக நிற்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Sanatana Dharma Row: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு, ரூபாய் 10 கோடி அறிவித்த அயோத்தி சாமியார்..