Villupuram DMK : ”அமைச்சர் பொன்முடி பேனர் கிழிப்பு” உச்சக் கட்டத்தில் திண்டிவனம் திமுக கோஷ்டி பூசல்..!
விழுப்புரம் மாவட்டம் யாருக்கு என்பதில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆதரவாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது
![Villupuram DMK : ”அமைச்சர் பொன்முடி பேனர் கிழிப்பு” உச்சக் கட்டத்தில் திண்டிவனம் திமுக கோஷ்டி பூசல்..! Clash between DMK minister ponmudi supporters Uproar in tindivanam due to banner tearing Villupuram DMK : ”அமைச்சர் பொன்முடி பேனர் கிழிப்பு” உச்சக் கட்டத்தில் திண்டிவனம் திமுக கோஷ்டி பூசல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/6d938e98d07b33c1120d2dca49deb7e41716795965378113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு திமுக மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ-வாகவும் இருந்த புகழேந்தி சில நாட்களுக்கு முன்னர் காலமானார். இதுவரை புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படவில்லை. அதனால், அமைச்சர் பொன்முடியே தெற்கு மாவட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருக்கிறார்.
இந்த இருவர் ஆதரவாளர்கள் இடையே அடிக்கடி கோஷ்டி பூசல் ஏற்படுவதும் பேனர் வைப்பதில் பிரச்னை ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக சமீக காலத்தில் மாறிப்போன பிறகு, மீண்டும் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டத்தை தனது ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி மெனக்கெட்டு வருகிறார்.
செல்வாக்கை விரிவுப்படுத்த முயற்சி
தெற்கு மாவட்டத்திற்குள் செல்வாக்கை செலுத்த அமைச்சர் மஸ்தானும் வடக்கு மாவட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த விழுப்புரத்திலும் செல்வாக்கோடு இருக்க அமைச்சர் பொன்முடியும் தொடர்ந்து முயற்சித்து வரும் சூழலில் இருவர் ஆதரவாளர்களிடையே அவ்வப்போது கோஷ்டி பூசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரண்டு மாவட்டத்திலும் பொன்முடி பேனர்கள், மஸ்தான் புகைப்படம் போட்ட பேனர்கள் வைப்பதில் இருவர் ஆதரவாளர்களுக்கும் இடையே எப்போதும் கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது. அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்கள் பேனர் வைக்கும்போது பொன்முடி புகைப்படத்தை தவிர்ப்பதும், பொன்முடி ஆதரவாளர்கள் பேனர் வைக்கும்போது மஸ்தான் புகைப்படத்தை சிறிய அளவில் போடுவதோ அல்லது தவிர்ப்பதோ நடந்து வருகிறது.
துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி
பொன்முடி திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருப்பதால், மாவட்டத்தில் பேனர் வைத்தால் அவரது புகைப்படம் இருக்க வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே பொன்முடி புகைப்படத்தை தவிர்த்து உள்ளடி அரசியல் செய்வதாக பொன்முடி ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைச்சர் பொன்முடியின் தீவிர ஆதரவாளரான மாநில தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா வைத்த பேனரை அமைச்சர் மஸ்தான் தரப்பினர் கிழித்ததாக புகார் எழுந்தது. அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானிடம் இருந்து அமைச்சர் பொன்முடி மைக்கை பிடுங்கியது திமுகவினர் மத்தியிலேயே பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வாறாக தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோரின் கோஷ்டி பூசலும், குடுமிப் பிடி சண்டையும் நடைபெறுவது வாடிக்கையான ஒன்றாகி போனது.
போலீசாரை தூண்டியது மஸ்தான் தரப்பா ?
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளை வீதி சந்திப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பொன்முடியின் தீவிர ஆதரவாளரான 17வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன் ரேணுகா தரப்பில் இரு இடங்களில் அமைச்சர் மஸ்தான் புகைப்படத்தை சிறிய அளவிலும், அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்தை பெரிய அளவிலும் போட்டு பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனரை அகற்ற வேண்டும் என திண்டிவனம் போலீசாருக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்பட்டது.
ஆனால், திண்டிவனம் நகரம் முழுவதும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எவ்வித அனுமதியும், முன்னறிவிப்பும் இன்றி பேனர்கள் வைத்துள்ளனர். அதற்கு மட்டும் எவ்வாறு போலீசார் அனுமதி அளித்தனர் ? அந்த பேனர்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு இந்த பேனரை அகற்றட்டும் என்றும் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் பேனரில் இருப்பதால்தான் அவற்றை அகற்ற போலீசார் அறிவுறுத்துவதாக நகர மன்ற உறுப்பினர் ரேணுகா இளங்கோவன் தரப்பில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த பேனர் அகற்ற வலியுறுத்தியதை போலீசார் கைவிட்டனர்.
பொன்முடி புகைப்படம் போட்ட பேனர் கிழிப்பு
இந்த நிலையில் நேற்று இரவு யாரோ சிலர் பொன்முடியின் புகைப்படம் இருந்த பேனரை கிழித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்முடியின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பேனர் கிழிப்பு சம்பவம் குறித்து முறைப்படி புகார் அளிக்க வலியுறுத்தியதன் பேரில் அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள் நகர மன்ற உறுப்பினர் ரேணுகா இளங்கோவன் தலைமையில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொன்முடி ஆதரவாளர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனம் நகரம் முழுவதும் அதிகளவிலான பேனர்கள் வைப்பதென முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)