நடிகர்கள் கட்சி அறிவிப்பதால் பயப்பட தேவையில்லை: புதுச்சேரி முன்னாள் முதல்வர்
தமிழக முதல்வர் மீனவர்கள் பிரச்சினை குறித்து பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடியால் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியவில்லை.
நடிகர்கள் கட்சி அறிவிப்பதால் பயப்பட வேண்டிய தேவை இல்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி பேட்டி.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி மூலவர், உற்சவர், தெட்சினாமூர்த்தி உள்பட சுவாமிகளை தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக மீனவர்கள் நமது பகுதியில் மீன் பிடித்தாலும் இலங்கை ராணுவம் கடலூர் காவல் படை போலீசாரால் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை 5 நாட்களில் திருப்பி கொண்டு வந்து விடுவோம். படகுகளையும் மீட்டு விடுவோம். ஆனால் பிரதமர் மோடி இலங்கை சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும் படகுகளைக் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் மீனவர்கள் பிரச்சினை குறித்து பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடியால் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியவில்லை.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழக அரசுக்கு எதிராகவும், அரசு வரும் கொண்டு வரும் திட்டங்களை விமர்சனம் செய்வதும், தமிழக அரசு திட்டங்களை மத்திய அரசோடு ஒப்பிட்டு அது பொருந்தாது எனக் கூறி வருகிறார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். ஆனால் தமிழக முதல்வரும், மாநில கல்வி அமைச்சரும், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி விட்டார்கள். இவ்விஷயத்தில் ஆனாலும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். பிரதமர் மோடியின் எஜமான் அஜெண்டாவை நிறைவேற்றுவதில் கவர்னரின் வேலையாக உள்ளது. புதுச்சேரியில் நான் முதலவராக இருந்தபோது கிரண்பேடி செயல்பட விடாமல் தடுத்தார். ஆனால் நாங்கள் அவரை விரட்டி விட்டோம். தமிழகத்திலும் முதல்வருக்கு எதிராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக கவர்னர் எப்படி செயல்பட முடியும். இதே நிலைதான் மேற்குவங்கம், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது இதனால் கவர்னர் பதவி தேவையா என கேள்வி எழுகிறது.
அதானி பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளார் என ஆதாரங்களோடு கூறி வருகின்றோம். ஆனால் பார்லிமெண்டிலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கேள்விக்கு பாஜகவால் பதிலளிக்க முடியவில்லை. பங்குச்சந்தை முறைகேட்டில் அதானியை பாதுகாப்பதில் பிரதமர் மோடி முனைப்பு காட்டி வருகிறார். பிரதமர் மோடியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவரது கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் சந்திரபாபு நாயுடு சீராக் பாஸ்வான் ஆகியோர் அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருக்கின்றனர். பிரதமர் மோடியால் கம்பீரமாக நடக்க முடியவில்லை. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்.
புதிதாக கட்சியை ஆரம்பித்து உள்ள நடிகர் விஜய் எனது நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்கள். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பாஜகவோடு இணைந்து செயல்பட மாட்டார் அவர் விஜய்யோடு இணைந்து கரை சேரலாம் என்று நினைக்கின்றார். இதனால் விஜய் கட்சி மாநாட்டிற்கு முதல்வர் ரங்கசாமி செல்லலாம் என தகவல் கிடைத்தது. நடிகர்களில் கட்சி ஆரம்பித்தவர்களில் எம்ஜிஆர், என்.டி.ஆர்க்கு பிறகு யாரும் நீண்ட நாள் நிலைத்ததில்லை இதுதான் சரித்திரம். இதனால் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் நாம் ஒன்றும் பயப்படத் தேவையில்லை என்றார்.