அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்; எத்தனை நாட்கள்? எதற்காக? அவர் சொன்ன அந்த பாயிண்ட்.?
Chief Minister Stalin America: என் ஒரு தோளில், ஆட்சித் பொறுப்பையும் மற்றொரு தோளில் கட்சித் பொறுப்பையும் சுமந்தபடியேதான் அமெரிக்காவுக்குப் பறக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு இன்று இரவு புறப்படுகிறார்
17 நாட்கள் திட்டம்:
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு புறப்படுகிறார் .
ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறார்.
அதன்பின், செப்டம்பர் 2-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறார். “ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறேன்.
அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித்தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
எதற்காக அமெரிக்கா?
எதற்காக அமெரிக்கா பயணம் என்பது முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது “ தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.
தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச் சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலளாகவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற் கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.
திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
”அமெரிக்காவில் இருந்தாலும், தாய்வீட்டில்தான் மனம்”
முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், மதிப்பிற்குரிய கழக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன். உடன்பிறப்புகளிடம் என் உணர்வுகளைக் கடிதம் வாயிலாகவும் காணொலிகளாகவும் பகிர்ந்து கொள்வேன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்