CM Stalin America: ஆகஸ்ட் 27ல் அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்
CM Stalin America: தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாக அமைச்சர் டி. ஆர்.பி ராஜா தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலளிபதிர்களை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி ராஜா தெரிவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 27 :
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி ராஜா தெரிவித்ததாவது, ”முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவிருக்கிறார். அங்கே, மிக முக்கியமான நிறுவனங்களுடனான சந்திப்பு இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி , முதலமைச்சர் புறப்படுவார் என நினைக்கிறோம்” என ராஜா தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்:
தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா செல்லவிருப்பதாக ஏற்கனவே சட்டமன்றத்தில் தொழில்வள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், வரும் 27ம் அமெரிக்கா புறப்படுவார் என நினைப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ஸ்டாலின் ஒருமாத பயணம்?
முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதலமைச்சரின் பயணம் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. தலைமை செயலாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகள் முதலமைச்சர் உடன் பயணிக்க இருக்கின்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த தலைமை நிர்வாகிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.
வெளிநாட்டு பயணங்கள் – முதலீடு:
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதே இலக்கு என, முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்காகவே பெரியளவிலான முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். உதாரணமாக, 2022ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சென்று ரூ.6100 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்தன. இதன்மூலம் 15100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 2023ஆம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கும், கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நாட்டிற்கும் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்தார். இதனிடையே, சென்னையில் உலக தொழிலாளர் முதலீட்டாளர் மாநாட்டையும் தமிழக அரசு நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக தான், முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க செல்லவிருக்கிறார்.