கலைஞர் நூலக இட சர்ச்சை: ஆதாரமின்றி பேசாதீர்கள் என செல்லூர் ராஜுவுக்கு முதலமைச்சர் அட்வைஸ்
முன்னாள் அமைச்சராக இருந்தவர் செவிவழிச் செய்திகளை பேரவையில் பதிவு செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று செல்லூர் ராஜுவுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்
பென்னிக்குயிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டப்படவுள்ளதாக ஆதாரம் இல்லாமல் தவறாக சொல்லக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னிக்குயிக் இல்லத்தை இடித்து கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருகிறது எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ”நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது ஆளுங்கட்சியினரிடம் இருந்து எவ்வளவு குறுக்கீடு வந்தது என்பது மனதில் உள்ளது, இருப்பினும் நேற்று முதலமைச்சர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கிட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். ஆனால் தவறான கருத்தை உறுப்பினர் பதிவு செய்கிறார். அந்த இல்லம் பென்னிக்குயிக் இல்லம் இல்லை. அந்த கட்டிடம் 1912-ம் ஆண்டு கட்டப்பட்டப்பட்டு உள்ளது. ஆனால் பென்னிகுயிக் 1911 ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பென்னிக்குயிக் இல்லத்தை அப்புறப்படுத்தி கலைஞர் பெயரில் நூலகம் கட்டுவதாக உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது தவறான கருத்து என்றார். மேலும், அது பென்னிகுயிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால் அரசு ஏற்பதகாகவும், நிச்சயம் இடத்தை மாற்ற அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் ஆதாரம் இல்லாமல் கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, செவி வழியாக வந்த செய்தியை பதிவு செய்ததாக விளக்கமளித்தார்.
முன்னாள் அமைச்சராக இருந்தவர் செவிவழிச் செய்திகளை பேரவையில் பதிவு செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று செல்லூர் ராஜுவுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்படும் கலைஞர் நூலகத்திற்கு "7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம்" என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், கலைஞர் நூலகத்திற்கு' தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்த சர்ச்சை எழுந்த போதே மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் "15.01.1841-ல் பிறந்த கர்னல் பென்னிகுயிக் 09.03.1911-ல் காலமானார். பொதுப்பணித்துறை ஆவணங்களைப் பரிசீலனை செய்ததில் இந்தக் கட்டிடம் 1912-ல் பூமி பூஜை செய்யப்பட்டு 1913-ல் கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டிட பதிவேடு எண். 159/1- ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜான் பென்னிகுயிக் அவர்கள் மறைந்த காலத்திற்குப் பின் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இக்கட்டடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை" என தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.