முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மனு
சட்டசபை தேர்தல் பரப்புரையில் அரசு சம்பளம் பெறும் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சியனர் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், அரசு சம்பளம் பெறும் முதல்வர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசியல் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனரா என கண்காணிக்க முறையான அமைப்புகள் ஏதும் இல்லாததால், அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதிக்க கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.