H Raja: செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுத்த மாதிரி பொன்முடிக்கும் அடைப்பு எடுக்கணும் - எச்.ராஜா
கொள்ளிடம் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு முறைப்படி வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், அதன் கூட்டணி கட்சியான திமுக அரசை கண்டித்தும், கொள்ளிடம் ஆற்றில் உப்புநீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை கட்டக்கோரியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் அகோரம் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் , பொறுப்பாளர் தங்க வரதராஜன், வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் இல்லத்திற்கு சென்று விருந்து சாப்பிட்டார். ஆனால், விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் என அவர் கேட்கவில்லை.
கர்நாடகாவில் பேசி தண்ணீர் கேட்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுக்கிறார். 5 ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த போது கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தவரை காவிரி பிரச்சனை வரவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தது முதல் காவிரி பிரச்சனையால் டெல்டா விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1967, 68 ஆம் ஆண்டிலேயே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் தேவைகளுக்காக அவர்கள் அணை கட்டுகின்றனர் என்றார்.
தமிழகத்திற்கு திமுக நல்லது நினைக்கவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் வரை அல்லது திமுக அரசை நீக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இது தொடர்பாக டெல்டா பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார். அவர் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் நான் பங்கேற்பேன்.
Cauvery Water: ”தமிழ்நாட்டுக்கு தண்ணீர் இல்லை"...கர்நாடக தடாலடி...அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!
820 கோடி கிராவல் கடத்தல், 41 கோடி வங்கி லாக்கரிலும் வைத்துள்ள அமைச்சர் பொன்முடி கொஞ்சம் அடங்கிப் போக வேண்டும். அதிகமாக பேசினால் அதற்கு வில்லங்கம் வந்துவிடும். செந்தில் பாலாஜிக்கு இதய அடைப்பு எடுத்தது போல் அடுத்து அமைச்சர் பொன்முடிக்கும் நான்கு அடைப்பு எடுக்க வேண்டும், அதுபோன்று மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே. எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரும் அடுத்த வரிசையில் உள்ளனர்.
கொள்ளிடத்தில் வெள்ள மணல் பகுதியில் தடுப்பணை கட்ட 750 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அந்தக் கமிட்டியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கருப்பு முருகானந்தம், அகோரம் ஆகியோரை நியமிக்க வேண்டும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் வரை அல்லது திமுக அரசை நீக்கும் வரை டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும்” என்று பேசினார்.