TN Politics: ”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?
TN Politics: பீகார் சட்டமன்ற தேர்தலின் போது முன்னெடுத்த திட்டங்களை அப்படியே, தமிழ்நாடு தேர்தலுக்கும் பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாம்.

TN Politics: எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திமுகவை வீழ்த்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
பீகார் தந்த வெற்றி:
பீகாரில் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக நீடிக்கும் நிதிஷ்குமார் மீதான அதிருப்தி, போதிய வளர்ச்சியின்மை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாதது உள்ளிட்ட பல காரணங்களால், இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால், நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளது. 202 இடங்களில் ஆளும் என்டிஏ கூட்டணி வென்று அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. இதற்கு பாஜக முன்னெடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளே காரணமாக கூறப்படுகிறது. இதன் விளைவாகவே வாக்குகளை சிதறாமல் அறுபடை செய்து ஆட்சியை மீண்டும் அந்த கூட்டணி வசப்படுத்தியுள்ளது.
ஒரே குடையின் கீழ் எதிரிகள்:
என்.டி.ஏ., கூட்டணியின் மிகப்பெரிய வெற்றிக்கு முன்னாள் எதிரிகள் அனைவரையும், பாஜக தனது கூட்டணியின் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நிதிஷ்குமாருக்கு எதிரிகளாகவே இருந்தாலும், வெற்றி என்ற ஒற்றை புள்ளியை மையமாக கொண்டு சிறிய கட்சிகள் கூட கூட்டணிக்கும் கொண்டு வரப்பட்டன. உதாரணமாக,
- முதலமைச்சர் பதவியால் நிதிஷ்குமாரின் எதிரியாக மாறிய ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி
- நிதிஷ்குமார் உடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவர் உபேந்திர குஸ்வாஹா
- 2020ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியுற காரணமாக இருந்த லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோரையும் பாஜக என்டிஏ கூட்டணியின் கீழ் கொண்டு வந்தது. அதுவே கூட்டணியின் பிரமாண்ட வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.
எதிர்கள் இணைய காரணம் என்ன?
- நிதிஷ்குமாரின் எதிரிகளாக இருந்த பல தலைவர்களுக்கு அரசியல் எதிர்காலம் என்பதே கேள்விக்குறியாக இருந்தது. தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ள கூட்டணியில் இணைந்தனர்
- கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரவர் பலங்களுக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
- தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்திலும் பங்களிக்கப்படும் என கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இந்த வலுவான கூட்டணிக்கு காரணமாக அமைந்தன
தமிழகத்தை டார்கெட் செய்யும் பாஜக:
பீகாரில் செயல்படுத்திய திட்டங்களை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தி, வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாம். இதற்காக பிளவுபட்டுள்ள முக்கிய கட்சிகளை ஒன்றிணைக்கவும் தீவிரம் காட்டி வருகிறதாம். ஆனால், எது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. காரணம் இரண்டு பிரதான கட்சிகளில் உட்கட்சி பூசல் தான் மிகப்பெரும் பிரச்னையாக நிலவுகிறது. அதனை முடித்து வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை.
பாஜகவிற்கான சவால்
பாஜக மிகவும் நம்பி இருக்கும் அதிமுக மற்றும் பாமகவில் உட்கட்சி பூசல் என்பது உச்சகட்டத்தில் உள்ளது. அதிமுகவில் பல முன்னணி தலைவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாமகவில் தந்தை மற்றும் மகன் இடையேயான மோதலால் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. நாம் தமிழர் கட்சி மீண்டும் தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளதால், திமுகவிற்கு எதிரான வாக்குகள் அங்கு சிதறுவதை தவிர்க்க முடியாது. அதுபோக, தனது கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்துள்ளதால், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் திமுக மீதான அதிருப்தியை தங்களுக்கு சாதகமான வாக்குகளாக மாற்றுவது என்ற பாஜகவின் திட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கப்போவதில்லை.
ஓரணியில் நவக்கிரங்கள்?
- அதிமுகவிற்கு துரோகம் செய்ததால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது என்பது சாத்தியமற்றது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பேசிவருகிறார்
- அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ் பேசி வந்தாலும், அதனை அதிமுக காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை
- அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தனது விருப்பம் என சசிகலா பேசுவதை கட்சி தலைமை பொருட்படுத்துவதே இல்லை
- எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே அதிமுக வலுப்பெறும் என டிடிவி தினகரன் பேசி வருகிறார்
- கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து ஈபிஎஸ் பேசாதது ஏன்? என செங்கோட்டையன் வாள் சுழற்றி வருகிறார்
- அன்புமணியை பாமகவிலிருந்தே நீக்கிவிட்டதகாவும், இனி தானே கட்சியின் தலைவர் எனவும் ராமதாஸ் அறிவித்துள்ளார்
- பாமகவில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸிற்கு இல்லை என்றும், கட்சியின் தலைவராக தொடர்வதாகவும் அன்புமணி பேசி வருகிறார்
இப்படி, நவக்கிரகங்களை போன்று ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ளக் கூட தயாராக இல்லாத தலைவர்களை தான் ஒருங்கிணைத்து, தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ”ஒன்று சேர், புரட்சி செய்” என்ற பாஜகவின் முயற்சி சாத்தியமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















