Nainar Nagendran on EPS : "எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே பா.ஜ.க.தான்.." - போட்டு உடைத்த நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிசாமியை ஆக்கியதே பா.ஜ.க.தான் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க.வின் துணைத்தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இன்று திருச்செந்தூரில் இன்று பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
"தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி. தலைவர்களின் மறைவுக்குப்பின் உள்ள இடைவெளியில் அ.தி.மு.க. கட்சியில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை அக்கட்சியின் விவகாரம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஒற்றை தலைமை பிரச்சினையை யார் ஆரம்பித்தார்கள்? என்று எல்லோருக்கும் தெரியும். இது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியதே பா.ஜ.க. தான். தி.மு.க.வின் ஆட்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. அக்னிபத் திட்டம் ஒரு அருமையான திட்டம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அது போன்று இல்லை. இளைஞர்கள் விருப்பப்பட்டு அக்னிபத் திட்டத்தில் சேரலாம். இது இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு.
ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கற்கள் எங்கும் கிடைக்கவில்லை. ஒரு யூனிட் மணல் 15000 முதல் 20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. ஒரு காலத்தில் பா.ஜ.க. போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாது. ஆனால் இப்போது போராட்டம் என்று அறிவித்தாலே மக்கள் வெற்றியாக கருதுகிறார்கள். பொதுமக்கள் நிறைய பேர் கலந்து கொள்கிறார்கள். "
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினையில் இருந்தே அ.தி.மு.க.- பா.ஜ.க.வுடன் கூட்டணியைத் தொடர்ந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலை சந்தித்தனர். மேலும், அ.தி.மு.க.வில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெல்லி செல்வதும், அங்கே பிரதமர் மோடி அல்லது அமித்ஷாவை நேரில் சந்திப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்