BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு தலைவருக்கான ரேஸ் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த ரேஸில் கருப்பு முருகானந்தமும் தற்போது குதித்துள்ளார். புதிய தலைவருக்கான அறிவிப்பு வரும் 9-ம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.

பாஜக தமிழ்நாடு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி சமீப காலமாக பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே பல சீனியர்கள் ரேஸில் இருந்த நிலையில், நயினாருக்கு வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது. இந்த நிலையில், தற்போத கருப்பு முருகானந்தம் தலைவர் ஆக்கப்படலாம் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்துவரும் பாஜக மாநிலத் தலைவருக்கான ரேஸ்
2026-ல் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. அப்படி கூட்டணி அமைக்க வேண்டுமென்றால், அதற்கு அண்ணாமலை சரிப்பட்டு வர மாட்டார் என்பதால், தலைவரை மாற்றும் நோக்கத்தில் பாஜக மேலிடம் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, பாஜக தமிழ்நாடு தலைவருக்கான ரேஸ் தொடங்கியது.
அந்த ரேஸில், பாஜக மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். அவர்கள் எல்லோருமே, அவர்களிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி மேலிடத்தில் பேசி வந்தனர். ஆனால், தலைவராவதற்கு அதிகமான வாய்ப்பு முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கே உள்ளதாக கூறப்பட்டது. ஏனெனில், டெல்டா பகுதிகளில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வகையில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்கலாம் என்று பாஜக மேலிடம் கருதியது. அதற்கு ஏற்றார்போல், தனக்கே தலைவர் பதவி கிடைக்கும் என நயினார் நாகேந்திரனும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மேலும், அதிமுகவுடன் நயினார் நாகேந்திரன் நெருக்கமாக இருப்பதால், கூட்டணி அமைப்பதற்கு சாதகமான சூழல் ஏற்படும் என்ற கோணத்திலும் பாஜக மேலிடம் யோசிக்கிறது.
திடீரென ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்
இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு மேல் தலைவர் பதவியில் இருக்கும் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், வேறு தலைவரை நியமிக்க பாஜக முயற்சித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலையிடமும், பாஜக தலைமை பரிந்துரைகளை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அண்ணாமலைக்கு நெருக்கமாக உள்ள கருப்பு முருகானந்தத்தின் பெயரை அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. கருப்பு முருகானந்தமும் அண்ணாமலையுடன் டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நயினார் நாகேந்திரனைப் போல் கருப்பு முருகானந்தமும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், டெல்டா பகுதியில் வாக்குகளை பெறும் வகையில், அவர் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கருப்பு முருகானந்தம் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், அதனால் அவரை மாநிலத் தலைவராக நியமித்தால் சரியாக வருமா என்ற கேள்வியும் பாஜக தலைமையிடம் எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
வரும் 9-ம் தேதி பாஜக தமிழ்நாடு தலைவர் குறித்த அறிவிப்பு.?
இந்நிலையில், வரும் 9-ம் தேதி, பாஜக தமிழ்நாடு தலைவரை இறுதி செய்யும் வகையில், டெல்லியில் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 9-ம் தேதியே பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஸில் யார் ஜெயிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
இதனிடையே, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகும் அண்ணாமலைக்கு வேறு பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என்றும், அப்படி இல்லையென்றால் எல்.முருகனைப் போல் மத்திய அமைச்சர் ஆக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, 9-ம் தேதி இவை எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும் என நம்பலாம்.





















