Annamalai: ’’போதும்டா சாமி’’ பாபா ரஜினி வழியில் அண்ணாமலை- விரக்தியில் ஆதரவாளர்கள்!
அண்ணாமலையின் ஆன்மிகப் பயணத்தைக் காண்பதில் மகிழ்ச்சி. அவருக்கு மகா அவதார பாபாஜி அருள் புரியட்டும்- வினோஜ் செல்வம்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை, ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவரின் ஆதரவாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பலகட்ட பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பரிந்துரை செய்தனர்.
அண்ணாமலைக்குப் பெருகிய ஆதரவு
இதற்கிடையே மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவி வகித்த காலத்தில் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. குறிப்பாக அண்ணாமலைக்காகவே கொங்கு மண்டலத்தில் இளைஞர்கள் அரசியலில் குதித்து ஆதரவாளர்களாக மாறினர்.
அதேநேரத்தில் அண்ணாமலை தலைவராக இருந்தபோது அக்கட்சியின் முக்கிய நபர்களாக உலா வந்த எச்.ராஜா, கேடி ராகவன், எஸ்வி சேகர் போன்ற பல முக்கிய நபர்களை ஓரங்கட்டியதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணி முறிந்ததற்கும் அண்ணாமலையின் சர்ச்சையான பேச்சுக்களே காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் பா.ஜ.க. - அதிமுக கூட்டணி
இதையடுத்து, அண்ணாமலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே உள்கட்சியிலே வலுவான எதிர்ப்புகள் எழுந்தன. அவரது பதவிக்காலம் முடிந்ததால் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்வு ஆவது உறுதி செய்யப்பட்ட உடனே, தமிழ்நாட்டில் மீண்டும் பா.ஜ.க. - அதிமுக கூட்டணி உண்டானது. இந்த கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலி்ல் போட்டியிட உள்ளது.
இமய மலைக்கு அண்ணாமலை ஆன்மிகப் பயணம்
இந்த நிலையில் அண்ணாமலை இமய மலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம், ’’அண்ணாமலையின் ஆன்மிகப் பயணத்தைக் காண்பதில் மகிழ்ச்சி. அவருக்கு மகா அவதார பாபாஜி அருள் புரியட்டும். அண்ணாமலையின் பாபா முத்திரை, என்னுள் இருக்கும் ரஜினி ரசிகரை உத்வேகம் அடையச் செய்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.
திமுகவுக்கு எதிராக காத்திரமாகக் களமாடிக் கொண்டிருந்த அண்ணாமலை, இப்படி ஆன்மிகப் பயணத்தில் இறங்கி விட்டாரே என்று அவரின் ஆதரவாளர்கள் சோகத்தில் உள்ளனர்.

