"அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் அண்ணாமலை" - புதுச்சேரி அதிமுக போர் கொடி
அண்ணாமலைக்கு ஒரு தலைமை பண்பு என்ன என்பது கூட தெரியாமல் கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக பேசுகிறார்- புதுவை அதிமுக
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி அவதூறாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரியில் அதிமுக சார்பில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி அவதூறாக பேசிய தனது கருத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர்களிடம் மாநில கழக செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
தன்னுடைய தகுதி, உயரம் என்னவென்று தெரியாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்களது புரட்சி தலைவி அம்மா அவர்களை பற்றி தவறான கருத்தை கூறியுள்ளார். இது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது. அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது. ஆனால் அண்ணாமலைக்கு ஒரு தலைமை பண்பு என்ன என்பது கூட தெரியாமல் கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக இன்று தவறான தகவல்களை கூறி வருவதை புதுச்சேரி மாநில அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருக்கின்ற ஸ்டாலின் அவர்கள் கருத்துக்கு வலு சேர்க்கின்ற விதத்தில் எங்களுடைய கூட்டணியில் இருந்து கொண்டு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை எங்களை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேசுவது அரைவேக்காட்டுத்தனமாகும். இதுபோல் அவதூறு பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து பாஜக தேசிய தலைமை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்காலங்களில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாத முடியாத நிலை ஏற்படும். இவரது பேச்சு திமுகவின் கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும். இதைக் கூட தெரியாமல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அண்ணாமலை அவர்கள் இதுபோல் அவதூறாக பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்