எதிர்கட்சி தலைவர் யார் எடப்பாடியா? அதிமுகவில் புதிய குழப்பம்
TN Election Result 2021 : எவ்வாறாயினும், கடந்தாண்டு அக்டோபர் மாதம், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பபாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் 158 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி கட்சிகள் 77 இடங்களில் வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மையுடன் நுழைகிறது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி, ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அதிமுக படுதோல்வி என்று கணித்திருந்த நிலையில், அக்கட்சி கடுமையான போட்டியை அளித்துள்ளது. அதிமுக - வுக்கும், கொங்கு மண்டலத்துக்கும் உள்ள அரசியல் இணைப்பு இத்தேர்தலில் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதிமுகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், பல சிக்கல்கள் நிறைந்த ஒன்றாகத் தான் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.
முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இபிஎஸ் அணிக்கும், ஒபிஎஸ் அணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. கட்சிக்குள் அதிகார மோதல் போக்கு தொடர்ந்து கொண்டு இருந்தன. எவ்வாறாயினும், கடந்தாண்டு அக்டோபர் மாதம், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பபாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். கட்சியில் இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற தனிமனித ஆளுமையை சுற்றி கட்டமைக்கப்பட்ட அதிமுக- வுக்கு இரட்டை தலைமை முதலில் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக, பாமக போன்ற கூட்டணிக் கட்சிகள் கூட கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தாமதம் காட்டினர். வடதமிழகத்தில் வன்னியர்கள் உள்ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை முதல்வர் எடப்பாடிபழனிசாமி சட்டபேரவையின் கடைசி நாளன்று அறிவித்தார். ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பாரா?, கூட்டணிக் கட்சியை திருப்திப்படுத்த வேண்டி உள்ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டிருப்பாரா? போன்ற பல கேள்விகள் அதிமுகவின் இரட்டைத் தலைமையை நோக்கி எழுப்பப்படுகின்றன. ஜெயலலிதா வன்னியர் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானவர் இல்லையென்றாலும், அரசியல் அழுத்தங்களுக்காக கடைசி நேரத்தில் அறிவித்திருக்க மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், மோகன், கோபால கிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த வழிகாட்டுதல் குழுவிலும், அதிகமானோர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை கட்சிக்குள் நடந்த உட்கட்சி பூசல்களை அதிமுகவால் சமாளிக்க முடிந்தது. ஆனால், யார் திர்கட்சித் தலைவர்? என்ற கேள்விக்கு இபிஎஸ்- ஒபிஎஸ் இடையே சுமூகமான பதில் இருக்கும என்பதை கூட உறுதியாக கூற முடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என பலரும் கூறுகின்றனர். இதனிடையே ஓபிஎஸ் தன்னை எதிர்கட்சி தலைவராக அறிவிக்க கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.