காந்தி எழுதிய கடிதம் யாருக்கு? : காங்கிரஸ் ஜெயராம் ரமேஷ் ட்வீட்
புத்தக வெளியீட்டு விழாவின் பொது பேசிய ராஜ்நாத் சிங், " சாவர்க்கருக்கு எதிரான ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறும் போக்கு அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் டெல்லியில் நிகழ்ந்த சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனு அளித்து வெளியே வந்தார் என்பதைச் சுட்டிக்காட்டி சுதந்திரத்துக்கான அவரது போராட்டத்தை ஏளனப்படுத்துவது வரலாற்றை திரிக்கும் வேலை எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் காந்தி சொன்னதால்தான் அவர் கருணை மனு அளித்ததாகவும் அந்த நிகழ்வில் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், ’மோடி அரசாங்கத்தில் சுயமாகச் சிந்தித்துப் பேசக்கூடியவர்களில் சிலராக ராஜ்நாத் சிங் உள்ளார்.ஆனால் அவரும் மற்ற ஆர்.எஸ்.எஸ்.களுக்கு விதிவிலக்கானவர் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். காந்தி எழுதிய கடிதம் சாவர்க்கரின் சகோதரருக்கு’ எனக் குறிப்பிட்டு என்.டி.சாவர்க்கருக்கான காந்தியின் கடிதத்தை தனது ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.
Rajnath Singh-ji is amongst the few sober & dignified voices in Modi Sarkar. But he doesnt seem to be free of RSS habit of rewriting history. He has given a twist to what Gandhi actually wrote on Jan 25 1920. Here is that letter to Savarkar’s brother. pic.twitter.com/E8Gxq59TxZ
— Jairam Ramesh (@Jairam_Ramesh) October 13, 2021
முன்னதாக, உதய் மகுர்கர், சிராயு பண்டித் ஆகியோர் எழுதிய Veer Savarkar: The Man Who Could Have Prevented Partition என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள அம்பேத்கர் பன்னாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தக வெளியீட்டு விழாவின் பொது பேசிய ராஜ்நாத் சிங், " சாவர்க்கருக்கு எதிரான ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறும் போக்கு அதிகரித்துள்ளது. சவார்க்கர் பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால் தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சிலர் உண்மைகளை மறைத்து பொய்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். பொதுவாக ஒரு கைதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு என்றாலும், அவர் தனது விடுதலைக்காக கருணை மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பதே உண்மை. காந்தியின் அறிவுறுத்தலின் பேரிலே விநாயக் தாமோதர் சாவர்க்கர் கருணை மனு அளித்தார் (இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்று இருந்தாலும் 12 ஆண்டுகளின் பின் 1924 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்). சாவர்க்கரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர் மகாத்மா காந்தி" என்று கூறினார்.