'அரசியலில் இருக்க வேண்டும் என இருக்கிறேன்.. என்னை விட்டால் தோட்டத்தில் விவசாயம் பார்க்க போய்விடுவேன்' - அண்ணாமலை
இன்று நான் டெல்லிக்கு செல்கிறேன். யாத்திரையில் ஒவ்வொன்றை கடக்கும் பொழுதும் தேசிய தலைவர்களுக்கு நடைப்பயணம் எப்படி செல்கிறது என்பது குறித்தான அறிவிப்பை நான் தெரிவித்து வருகிறேன் என்றார் அண்ணாமலை.
பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரகார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரை சுத்தம் செய்யும் பணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று ஒரு மணி நேரம் நாட்டின் தூய்மைக்காக மக்கள் அனைவரும் தூய்மை பணியில் செய்ய வேண்டும் என பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார். அதன்படி இங்கு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தக்குளம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பயன்படக்கூடிய ஒரு குளம். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வரும் போது, கிட்டத்தட்ட 96 சதவிகிதம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பணிகள் முடிவடைந்து இருந்தது. அதன் பின்னர் ஆமை வேகத்தில் பல போராட்டங்கள் செய்து 100 சதவிகிதம் திட்டம் நிறைவடைந்து இருப்பதாக திமுக அரசு கூறுகிறது. ஆனால் இரண்டு மாத காலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.
மீண்டும் நடைபயணம்:
அனைவரும் பாரதத்தின் தூய்மைக்காக பணியாற்றினால் இந்த நாடு தூய்மையாக மாறும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சாலையோர வியாபாரிகளுக்கு மதிப்பளித்து சாலையோர பொருட்களையும் வாங்குங்கள். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை என் மண் என் மக்கள் நடைபயணம் மிகவும் நன்றாக உள்ளது. இனி நான்காம் தேதி மேட்டுப்பாளையத்தில் மீண்டும் அந்த நடைபயணத்தை துவங்குகிறோம்.
இதில் இளைஞர்கள் மகளிர் குடும்பத் தலைவிகள் என அனைவரும் பங்கேற்கிறார்கள். ஜனவரி மாதம் இந்த நடைபயணம் முடியும் பொழுது பாஜகவிற்கு தமிழகத்தில் பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கும். குன்னூர் விபத்தில் அரசு துரிதமாக வேலை செய்து வருகிறது. மலைப்பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவோர் மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுகிறேன்.
பா.ஜ.க. வேலை செய்கிறது:
இன்று நான் டெல்லிக்கு செல்கிறேன். யாத்திரையில் ஒவ்வொன்றை கடக்கும் பொழுதும் தேசிய தலைவர்களுக்கு நடைப்பயணம் எப்படி செல்கிறது என்பது குறித்தான அறிவிப்பை நான் தெரிவித்து வருகிறேன். மூன்றாம் தேதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. டெல்லி சென்று விட்டு வந்த பிறகு அக்கூட்டத்தில் பங்கேற்கிறேன். அதனை தொடர்ந்து 4ம் தேதியில் இருந்து பாதையாத்திரை மீண்டும் துவங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏழு மாத காலங்கள் இருக்கின்ற நேரத்தில் அவரவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என அனைவரும் எண்ணுவார்கள்.
பாஜகவும் அதற்கான வேலையை செய்து வருகிறது. கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் தேசிய தலைவர்கள் பேசுவார்கள். ஏனென்றால் ஒரு கருத்திற்கு எதிர் கருத்து சொல்லினால், அது எங்கே போய் முடியும் என்று தெரியாது. எனவே அது குறித்து நான் பேச அவசியம் இல்லை. நேரம் வரும் பொழுது அது பற்றி பேசலாம்.
தூய்மை அரசியலால் தோல்வி நிச்சயம்:
தூய்மையான அரசியலை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தூய்மையான அரசியல் என்பது ஒரு விதை. தூய்மை அரசியல் என்பதை ஒரு தாரக மந்திரமாக முன்வைத்து எடுத்து செல்கிறோம். தூய்மை அரசியல் என்று சொன்னாலே தோல்விகள் நிச்சயம். அதனை தாண்டித்தான் நாம் நிற்க வேண்டும். மக்கள் இப்படித்தான் அரசியல் வேண்டும் என்று சொன்னால் அரசியல்வாதிகள் அவர்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
இந்த மாதிரியான அரசியல்வாதியைத்தான் நான் ஆதரிப்பேன் என்று மக்கள் சொல்லிவிட்டால், அனைத்து அரசியல்வாதிகளும் மாறுவார்கள். கட்சி அடிப்படையில் இல்லாமலும் சித்தாந்த அடிப்படையில் இல்லாமலும் அனைவரும் மாறுவார்கள். அதற்கான விதையை நான் போடுகிறேன் என்னை போல் பலரும் போடுகிறார்கள். அதற்காக மற்றவர்கள் எல்லாம் தவறான அரசியல் செய்கிறார்கள் என நான் கூறவில்லை.
தமிழ்நாடு தூய்மை அரசியலுக்கு இலக்கணமாக இருக்க முடியும். தூய்மை அரசியலுக்கு இளைஞர்கள் பலரும் வரவேண்டும் என்னுடைய யாத்திரைக்கும் பல இளைஞர்கள் வருகிறார்கள். அதனை எந்த அளவிற்கு அரசியல் இயக்கமாக மாற்றுவது என்பது குறித்து எனக்கு தெரியாது அதற்கான நேரம் எடுக்கும். இந்த நேரத்தில் என்னை விட்டு விட்டால் நான் தோட்டத்திற்கு போய் விடுவேன். இதைவிட எனக்கு எல்லாமே முக்கியம். என்னுடைய வேலையை என்னுடைய தோட்டத்தில் செய்யணும். அரசியலில் கட்டாயப்படுத்தி நான் இல்லை. அரசியலில் இருக்க வேண்டுமே என்று இருக்கிறேன். மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலை ஒரு கருவியாக பார்க்கிறேன்.
தனி மனித தாக்குதல்:
அரசியலைப் பொறுத்தவரை 70% நெகட்டிவ் 30% பாசிட்டிவ் உள்ளது. ஏனென்றால் இங்கு தனிமனித தாக்குதல் சித்தார்ந்த அடிப்படையில் தாண்டி நிற்க வேண்டும். இதில் கிடைக்கக்கூடிய மாற்றம் என்பது மற்றதை விட வேகமாக கிடைக்கும். தன்னார்வக் குழுவில் 10 ஆண்டுகளில் எடுக்கக்கூடிய மாற்றம் அரசியலில் இரண்டு மாதத்தில் கிடைக்கும். அரசியலைப் பொறுத்தவரை பிடித்து அரசியல்வாதியாக இருக்கிறேன் என்று சொல்லுவதை விட மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் அரசியலில் இருக்கின்றேன் எனக் கூறுவது சரியான வார்த்தையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
டீசன்டான கட்சி:
நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்தது குறித்தான கேள்விக்கு, ”அது குறித்து எனக்கு தெரியாது. நான் பாதையாத்திரை சென்று கொண்டிருக்கிறேன். கட்சியில் இணைவது பற்றி கூறினால் நான் யாரையும் இணைக்க வேண்டும் எனக் கூறுவதில்லை. அரசியலுக்கு வந்த புதிதில் நான் வெள்ளை கருப்பாக சமுதாயத்தை பார்த்தேன். இந்த மூன்று ஆண்டுகளாக பார்க்கும் பொழுது இதனை ஒரு பவர் கேமாக அரசியலை பார்க்கிறார்கள். அரசியல் மூலமாக ஆதாயங்களை தேடி தான் ஒரு பவர்ஃபுல் மனிதர் என்பதை காட்டுவதற்காக வருகிறார்கள்.
சிலர் தவறாக மனிதர்களாக இருந்தாலும், தன்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதனை பார்க்கிறார்கள். இந்த கட்சியை டீசன்டாக நாங்கள் நடத்த பார்க்கிறோம். நீங்கள் சொல்லுகின்ற நபருக்கும் கூட அந்த அணியின் தலைவர் ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருப்பார் என நம்புகின்றேன். நான் இங்கிருந்து அதனை கண்காணித்து வருகிறேன்.
பா.ஜ.க.வை பயன்படுத்தட்டும்:
பாஜக கட்சியின் அடையாளத்தை வைத்துக்கொண்டு யாரேனும் தவறு செய்தால் நான் அதனை விட மாட்டேன். அவர் மாறுகின்றேன் என்று கூறியுள்ளதால் நான் அவருக்கு தடைக்கல்லாக இருக்க விரும்பவில்லை. பாஜகவில் அவர் இணையட்டும். நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றட்டும். இதன் மூலமாக அவருக்கு அமைதி கிடைக்கட்டும். நல்ல ஒரு பாரதத்தை படைப்பதற்கு பாஜகவை பயன்படுத்தி கொள்ளட்டும்” எனத் தெரிவித்தார்.