Kongu Eswaran: "அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அண்ணாமலை ஒரு துரும்பை கூட எடுத்துப்போடவில்லை" - ஈஸ்வரன் விமர்சனம்.
முதலமைச்சரின் அழுத்தத்தால் அமைச்சர் உள்பட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.
சேலத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "கொங்கு நாட்டிற்கு இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். கோவை ஈரோடு திருப்பூர் மக்களின் பல ஆண்டு கோரிக்கை அத்திக்கடவு அவிநாசி திட்டம் இன்று துவங்கியுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,045 ஏரி குளங்களுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்கும் திட்டம்.
1000 கிமீ மேல் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இதற்காக 15 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். இத்திட்டத்திற்காக போராடிய பலர் தற்போது உயிரோடு இல்லை. ஆனால் அவர்கள் போட்ட விதை தற்போது பயனளித்துள்ளது என்றார்.
குறிப்பாக, கடந்த 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டத்தின் நிலையை அமைச்சருடன் ஆய்வு செய்தோம். அப்போது நிறைய இடங்களில் நிலம் கையகப்படுத்தாமல் இருந்தது. காலிங்கராயன் அணைக்கு அருகில் இருந்து நீரேற்று செய்யப்படுகிறது. ஆனால் சம்மந்தப்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்தபடாமல் இருந்தது. முதல்வரின் அழுத்தத்தால் அமைச்சர் முத்துசாமி நிலத்தை கையகப்படுத்தி திட்டத்தை நிறைவு செய்துள்ளார். தற்போது மழை பெய்து வருவதால்தான் இத்திட்டம் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
துவக்கத்தில் இத்திட்டம் நிறைவு பெறுமா என்கிற பயம் இருந்தது. ஆனால் முதலமைச்சரின் அழுத்ததால் அமைச்சர் உள்பட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி நிறைவு செய்துள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இத்திட்டம் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். 1045 ஏரி குளங்களில் ஓரிரு இடங்களை இதர அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 2020ல் இத்திட்டத்தை துவக்கிய அதிமுக அரசுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. எனது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக அரசுக்கும் நன்றி கூறினார்.
பாஜக போராட்டம் அறிவித்த பின்னர் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்ட தாக பாஜகவினர் கூறுவது குறித்த கேள்விக்கு, பாஜகவிற்கு தனி திறமை உள்ளது. அதற்கு பாராட்ட வேண்டும். சுதந்திர தினத்திற்கு பிறகு அத்திகடவு அவிநாசி திட்டத்தை தொடங்க உள்ளதாக சிலிப்பர் செல் மூலம் தெரிந்து கொண்டு அண்ணாமலை பேசியுள்ளார். இத்திட்டத்திற்கு அண்ணாமலை ஒரு துரும்பை கூட எடுத்து போடல.
கொங்குநாட்டில் பிறந்ததாக சொல்லிக் கொள்ளும் அண்ணாமலை இதுவரை கொங்குநாட்டிற்கு ஒரு நல்லதாவது செய்துள்ளாரா? கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் அதற்கு ஏதாவது முயற்சி எடுத்தாரா அண்ணாமலை? தற்போது வெளியான மத்திய பட்ஜெட்டில் கோவைக்கு ஏதாவது பட்ஜெட் ஒதுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினோம். பிரஸ்மீட்டில் மட்டுமே அண்ணாமலை பேசுகிறார்.
அரசியல் ஆதாயம் தேடுவதையே திறமையாக கொண்டுள்ளார் அண்ணாமலை என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் சேலம், நாமக்கல், திருச்சி மக்கள் பயன்பெறும் வகையில் திருமணிமுத்தாறு திட்டத்தை கொண்டுவர வேண்டும். இதுவும் 50 ஆண்டுகால கனவுதான். இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்துக்கொள்ளும். விரைவில் முதல்வர் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்திகடவு அவிநாசி திட்டம் தற்போது காலிங்கராயன் அத்துக்கடவு அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் அத்திகடவு அவினாசி திட்டத்திற்கு முன்பு காலிங்கராயன் பெயரை சேர்த்து அறிவிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.