(Source: ECI/ABP News/ABP Majha)
H.Raja : அடித்துக் கொல்லப்பட்ட நாய் : எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..?
வளர்ப்பு நாயை அடித்துக்கொன்ற வழக்கில் எச்.ராஜா மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பேட்டி உள்ளிட்டவைகளால் மிகவும் பிரபலமானவர். இவர் கடந்த செப்டம்பர் 21-ந் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், அவர் , “எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கடிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது”
என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு கீழே பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது.
— H Raja (@HRajaBJP) September 21, 2022
இந்த நிலையில், ஸ்வப்னா சுந்தர் என்பவர் விலங்குகள் நல வாரியத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் எச்.ராஜாவின் டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி விலங்குகள் நல வாரியத்தில் எச்.ராஜா மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க இந்திய விலங்குகள் நல வாரியம் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
எச்.ராஜா மீது அளிக்கப்பட்டுள் புகார் குறித்து, அடுத்த 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு இந்திய விலங்குகள் நவல வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மிருகவதை தடைச்சட்டம் 1960 பிரிவு 11ன்படி, எந்தவொரு விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும். இந்திய தண்டனை சட்டம் 429ன்படி எந்த விலங்கையும் கொலை செய்தல், விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகும்.
தமிழக அரசியல் தலைவர்கள், அரசியல் நிலவரங்கள் பற்றி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்த எச்.ராஜா, நீண்ட நாட்களாக பெரியளவில் பரப்பான சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், அவரது பதிவிற்கு கீழேயும் பலரும் எச்.ராஜா மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க : Crime: ஒரே வீட்டில் அண்ணன் - தம்பி இருவரும் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.... நெல்லையில் சோகம்!
மேலும் படிக்க : Crime: அரசு விடுதி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... கொட்டும் மழையில் இறங்கி போராடிய சிறுமிகள்... ராஜஸ்தானில் பரபரப்பு!