YS Sharmila Join Congress: காங்கிரஸில் இணைந்தார் ஒய்எஸ் ஷர்மிளா.. ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைப்பு..!
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
ஒய்எஸ் ஷர்மிளா நேற்று இரவே அரசியல் காரணங்களால் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒய்எஸ் ஷர்மிளா கட்சியில் இணைந்தார். இவருடன் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டது. ஷர்மிளா காங்கிரஸில் இணைந்ததற்கு பிறகு அவரது சகோதரரும், ஆந்திர முதலமைச்சருமான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா முன்னாள் முதலமைச்சருமான கே.சி.ஆரை சந்திக்க ஹைதராபாத் செல்கிறார்.
கடந்த ஒய்.எஸ்.ஜெகன் 2021 இல் ஒரு தனியார் விழாவில் கே.சி.ஆரை சந்தித்தார். அதற்கு முன்னதாக இருவரும் கடந்த 2019ம் தேதி முதலமைச்சர்களாக சந்திப்புகளை நடத்தினர்.
முன்னதாக நேற்று இரவு ஷர்மிளா டெல்லி விமான நிலையத்திற்கு வந்தவுடன் நிருபர்கள், ”காங்கிரஸில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு, 'ஆம், அது போலதான் இருக்கிறது' என்று கூறினார்.
#WATCH | Delhi: On joining Congress, YSR Telangana Party (YSRTP) president, YS Sharmila says, "Yes looks like it. We will know tomorrow..." pic.twitter.com/k6kZlJOJLX
— ANI (@ANI) January 3, 2024
ஹைதராபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒய்எஸ் ஷர்மிளா, தானும் மற்ற தலைவர்களும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து டெல்லியில் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.
ஷர்மிளா பிரிக்கப்படாத ஆந்திராவின் முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஆவார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தது அரசியலில் மிகப்பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸில் தேசிய அளவில் பெரிய பதவி:
காங்கிரஸில் இணைந்தால், ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு தேசிய அளவில் கட்சியில் ஏதாவது பதவி வழங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸுடன் அவரது கட்சி இணைந்த பிறகு, தென் மாநில தேர்தல் பொறுப்பாளராக சர்மிளா நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்த ஒய்எஸ் ஷர்மிளா:
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான, ”பி.ஆர்.எஸ்-ன் ஊழல் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக” காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக ஷர்மிளா அறிவித்திருந்தார்.
2019 ஆந்திரபிரதேச தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம்:
ஒய்.எஸ். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த பிறகு, ஆந்திராவில் அவரது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அரசியல் பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில், ஷர்மிளாவும் கடந்த 2021 வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் ஒரு ஆளுமையாக இருந்தார். 2012ல் ஜெகன் நீண்ட காலம் சிறையில் இருந்தபோது, ஒய்எஸ்ஆர்சி தலைவராக சர்மிளா பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தினார். கடந்த 2019 ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஷர்மிளா தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம் செய்தார்.
2019 தேர்தலில் அபார பெரும்பான்மையுடன் ஜெகன்மோகன் வெற்றி பெற்றபோது, தனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படாததால் ஷர்மிளா கடும் அதிருப்தியில் இருந்தார். அதில் இருந்தே இருவருக்கும் புகைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், ஊடகங்களில் செய்திகள் வெளிவர தொடங்கின. இதை உண்மை என நிரூபிக்கும் வகையில், இருவரும் சமூக வலைதளங்களில் பண்டிகை நாட்களில் வாழ்த்துவது கூட இல்லாமல் போனது.
ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது இவர்கள் ஒரு குடும்பமாக இணைந்திருந்தாலும், அரசியல் ரீதியாக போட்டியாளர்களாகவே இருக்க வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.