துரோகிகளை நீக்குங்கள்..! ஓய்வெடுங்கள் அய்யா..! பாமகவில் மீண்டும் சலசலப்பு..!
Vanniyar Sangam Manadu conflict: வன்னியர் சங்க மாநாடு நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் பாமகவில் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.

30 வருசமாக இவர்கள் அள்ளிக் கொடுத்த வரலாறு தெரியாதா ? எத்தனை வன்னியர்களை வாழ வைத்துள்ளார்கள். அண்ணன் அன்புமணிக்கே இந்த நிலைமைண்ணா ? பா.ம.க தலைவர் அண்ணன் அன்புமணி அவர்கள் சீக்கீரம் முடிவெடுக்க வேண்டும் என்ற குரல்கள் பா.ம.கவில் எழத் தொடங்கியுள்ளன. 12 ஆண்டுகள் கழித்து, வன்னியர் சங்க மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில், 24 மணி நேரம் முடிவதற்குள் என்ன நடந்தது ? பாமகவில் என்பது குறித்து பார்க்கலாம்.
வன்னியர் சங்க மாநாடு
வன்னியர் சங்கம் சார்பில் மகாபலிபுரம் அருகே நேற்று, சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாடு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர் சங்க மாநாடு கடைசியாக நடந்திருந்தது. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து, வன்னியர் சங்க மாநாடு நேற்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநாட்டு குழு தலைவராக மாநாட்டிற்கான அனைத்து பணிகளையும் தலைமை ஏற்றுண மேற்கொண்டார்.
மாநாட்டு பொறுப்பாளர்களை நியமிப்பதில் தொடங்கி, அனைத்துவிதப் பணிகளையும் அன்புமணி ராமதாஸ் நேரடியாக தனது கண்காணிப்பில் செய்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நேற்று மேடையில் அன்புமணி, அனைத்து பணிகளையும் செய்தது வெளிப்படையாக தெரிந்தது. யார் எப்போது பேச வேண்டும், எந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறித்து, தொடர்ந்து மேடையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். ஆனால் நேற்று மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய, மாநாட்டு குழு தலைவர் அன்புமணியை, ராமதாஸ் பாராட்டவில்லை என்ற குற்றச்சாட்டை பாமகவினரை எழுப்பி உள்ளனர்.
ராமதாஸ் ஏன் அப்படி பேசினார் ?
கூட்டத்தில் இறுதியாக பேசிய ராமதாஸ், கட்சி நிர்வாகிகளை மிக மோசமாக விமர்சித்து இருந்தார். யாராக இருந்தாலும் கடலில் தூக்கி வீசி விடுவேன், என பேசியது மாநாட்டில் இருந்த தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் மருத்துவர் ராமதாசை விமர்சனம் செய்து, பாமகவினரை பதிவு செய்து வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம் : கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அன்புமணி மாநாட்டிற்காக அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வந்தார். எப்படி 12 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர் சங்க தலைவர் குரு, சுறுசுறுப்பாக பணிபுரிவாரோ அதே போன்று அன்புமணியும் செய்தார்.
பாமகவினர் கூறுவது என்ன ?
தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது. காவல்துறை மற்றும் ஆளும் கட்சி எதிர்பார்த்ததை விட, பல லட்சம் தொண்டர்கள் ஆர்வமுடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டோம். அரசியல் அழுத்தம் மற்றும் காவல்துறை அழுத்தும் என அனைத்தையும் தாண்டி அன்புமணி இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார் என தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து பாமகவினர் கூறுகையில், விஜய் மாநாட்டின்போது தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை , கழிவறை பற்றாக்குறை ஆகியவை மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்தப் பிரச்சனைகள் இந்த மாநாட்டில் ஏற்படவே இல்லை. அதற்காக அவ்வளவு திட்டங்களை அன்புமணி தீட்டி இருந்தார். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, இதுபோன்று ஒவ்வொன்றிலும் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற முன்மாதிரியான மாநாடாகவும், இது வருங்காலத்தில் இருக்கும் என மாற்று கருத்து இல்லை.
"அய்யா ஓய்வெடுக்கட்டும்"
இப்படி இரவு பகலாக உழைத்த அன்புமணியை, மருத்துவர் கட்டிப்பிடித்து பாராட்டுவார் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அதை செய்யாமல் தேவையில்லாமல், உட்கட்சி விவகாரங்களை மருத்துவர் பேசியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
ராமதாஸ் இப்படி நடந்து கொண்டதற்கு துரோகிகள் தான் காரணம். அவர்கள் தான் மருத்துவரின், மனநிலையை நன்கு பயன்படுத்தி தவறாக வழி நடத்துகிறார்கள். மருத்துவர் அய்யா ஓய்வு எடுக்க வேண்டும், 95 சதவீத கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்புமணி பின்னால் தான் உள்ளோம் எனத் தெரிவித்தனர்.





















