தந்தையை மிஞ்சிய மகன்! கட்சியை கைப்பற்றிய அன்புமணி! ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி!
"தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில், அன்புமணி தலைமையில் இயங்கும் அலுவலக முகவரி இடம்பெற்றுள்ளது"

தமிழ்நாட்டில் மிக முக்கிய கட்சிகளில் ஒன்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள், பாமக உடன் கூட்டணி வைத்து பல தேர்தல்களில் வெற்றியை சந்தித்து இருக்கிறது. இதனால் தேர்தல் நேரங்களில் கூட்டணி அரசியலில், பாமகவிற்கு என தனி செல்வாக்கு இருக்கிறது. பாமக தமிழ்நாடு முழுவதும் பரவலான கட்சி இல்லை என்றாலும், வடதமிழ்நாடு மற்றும் மேற்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 90 தொகுதிகளில், செல்வாக்கு பெற்ற கட்சியாக இருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. தேர்தல்களில் பாமக தோல்வியை சந்தித்தாலும், அக்கட்சியின் வாக்கு வங்கி குறையாமல் பார்த்துக் கொள்வது அக்கட்சியின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
தந்தை vs மகன் மோதல் Ramadoss Vs Anbumani
பாமகவின் நிறுவனராக ராமதாஸ் இருந்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு, பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாகவும், இனி அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வன்னியர் சங்க மாநாட்டிற்கு பிறகு இந்த பிரச்சனை சரியாகிவிடும் என்றே பாமகவினர் நம்பினர். ஆனால் அதன் பிறகு தான் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. அன்புமணியின் ஆதரவு பெற்ற மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை ராமதாஸ் நீக்க தொடங்கினார். அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு பதில் தனது, ஆதரவாளர்களை பதவியில் நியமித்து வந்தார். ராமதாஸின் இந்த செயல் பிடிக்காமல் ஒரு கட்டத்தில், ராமதாஸின் ஆதரவாளராக இருந்த சிலரே அன்புமணி பக்கம் செல்ல தொடங்கினர்.
அன்புமணியை விமர்சித்த ராமதாஸ்
இந்தநிலையில் அன்புமணியை ஊடகங்கள் முன்னிலையில் ராமதாஸ் விமர்சிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அன்புமணி தமிழக முழுவதும் நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்து, தற்போது அதை செயல்படுத்தி வருகிறார். ஆனால் அன்புமணி ராமதாஸின் நடை பயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்த ராமதாஸ், காவல்துறை மற்றும் உள்துறை ஆகிய இடங்களில் புகாரையும் கொடுத்திருக்கிறார்.
பாமகவின் தலைமையிடம் சர்ச்சை
தொடர்ந்து பாமகவின் தலைமையிடமாக சென்னையில் இருந்து மாற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இருந்து செயல்படும் என ராமதாஸ் அறிவித்தார். ராமதாஸின் எந்த குற்றச்சாட்டுக்கும் அன்புமணி தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணி என்ற பதிலை மட்டுமே தெரிவித்து வருகின்றனர். அன்புமணியின் பெயருக்கு பின்னால் ராமதாஸ் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என ஊடகங்களில் ராமதாஸ் தெரிவித்த பிறகும், அன்புமணி தனது பெயருக்கு பின்னால் ராமதாஸின் பெயரை பயன்படுத்தி வருகிறார்.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தநிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின், அலுவலக முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அன்புமணி தலைமையில், சென்னை தி.நகரில் இயங்கி வரும் அலுவலக முகவரிதான் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அன்புமணி தரப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அன்புமணி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் அன்புமணிக்கு கிடைத்திருப்பதாகவே, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த தகவல் ராமதாஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















