முதல்வராக எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாத அமித் ஷா; என்ன ட்விஸ்ட்? கூட்டணிக்குள் புகைச்சல்!
கூட்டணிக்கே வரமாட்டேன் என முரண்டு பிடித்த ஈபிஎஸை எப்படியோ சமாதானம் செய்து கூட்டணி வலைக்குள் வைத்துள்ளது பாஜக.

’’2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அதில் அதிமுகவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார்’’ என கூறியுள்ள அமித்ஷா, ஈபிஎஸ் பெயரை கூட குறிப்பிடாமல் அதிமுகவைச் சேர்ந்தவர் என பேசியுள்ளது அதிமுக பாஜக கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
கூட்டணி ஆட்சி என ஸ்டேட்மெண்ட்
கூட்டணி ஆட்சியா தனித்து ஆட்சியா என்பதில் நீண்ட நாட்களாகவே அதிமுக - பாஜக தெளிவின்றி குழப்பி வருகிறது. ’கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம், ஆட்சி தனித்துதான்’ என ஈபிஎஸ் கூறி வரும் நிலையில், பாஜகவின் பெரிய தலை முதல் மாநிலத் தலைவர் வரை வெளிப்படையாக கூட்டணி ஆட்சி என ஸ்டேட்மெண்ட் விட்டு வருகின்றனர்.
கூட்டணிக்கே வரமாட்டேன் என முரண்டு பிடித்த ஈபிஎஸை எப்படியோ சமாதானம் செய்து கூட்டணி வலைக்குள் வைத்துள்ளது பாஜக. பாஜக கூட்டணிக்கு ஓகே சொல்ல வைத்ததில் அதிமுக சீனியர்கள் பலரின் தலையீடு உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இத்தனை காலம் கட்சியின் எதிர்கால நலன் கருதியே அதிமுக தலைவர்கள் பாஜக கூட்டணியை விரும்பியதாக பேச்சுகள் இருந்து வந்த நிலையில்,தற்போது அது எடப்பாடி பழனிச்சாமிக்கு போடும் ஸ்கெட்ச்சா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திணறி வரும் ஈபிஎஸ்?
ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுகவில் இடைவிடாத குழப்பங்கள் நீடித்து வருகிறது. ஈபிஎஸ் அனைத்து பாலையும் நோ பாலாக்கி எப்படியோ பொதுச்செயலாளர் இருக்கையை பிடித்தாலும் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என நாலா பக்கமும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இது ஒருபுறமிருக்க புதிதாக செங்கோட்டையன், ஜெயக்குமார் என ஈபிஎஸ்க்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் கூட போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனை சமாளிக்க முடியாமல் ஈபிஎஸ் திணறி வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போது பாஜகவும் கூட்டணி ஆட்சி என்று நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பாஜக மறைமுக மிரட்டல்
ஒருவேளை 2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமைக்க ஈபிஎஸ் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் முதல்வர் வேட்பாளரை கூட நாங்கள் மாற்றுவோம் என பாஜக மறைமுக மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாகவே அமித்ஷாவின் இந்த பேச்சும் உள்ளது.
2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்..அதிமுகவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார். என் அமித்ஷா கூறியுள்ளார். இவ்வளவு வெளிப்படியாக பேசும் அமித்ஷா கூட்டணி ஆட்சிதான் - ஈபிஎஸ்தான் முதல்வர் என கூறியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை ஓப்பனாக விட்டு ஈபிஎஸை எச்சரித்துள்ளார் அமித்ஷா என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.






















