Amit shah : அமித் ஷா பிளான் பலித்ததா? சமாதானமான அதிமுக - ராமதாஸ், TTV ஆப்செண்ட்
Amit shah Chennai Visit: பல்வேறு திட்டங்களுடன் வந்த பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின், தமிழ்நாடு பயணம் தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Amit shah Chennai Visit: தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்ய முயன்ற அமித் ஷாவின், திட்டம் எதிர்பார்த்த அளவில் பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அமித் ஷா..!
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் யார்? என்பதை இறுதி செய்யவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநயாக கூட்டணியில் இடம்பெற உள்ள கட்சிகளை இறுதி செய்யவும், பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா சென்னை வருகை தந்துள்ளார். இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்து பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கான அமித் ஷாவின் பயணம் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனவும், இது ஒரு தோல்வி பயணமாகவே அமைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இதையே உணர்த்துவதகாவும் கூறப்படுகிறது.
புதிய தலைவர் - ஆர்எஸ்எஸ் தலையீடு?
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவை வழிநடத்தப்போகும், மாநில தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதே அமித் ஷாவின் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் தேசிய பாஜக தலைமை நயினார் நாகேந்திரனை தலைவராக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அதேநேரம், தென்காசி மாவட்ட பாஜக தலைவரான ஆனந்தன் அய்யாசாமியை தலைவராக நியமிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் வைத்து அமித் ஷா சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்தது முதலே, பாஜக மீது ஆர்எஸ்எஸ் அதிக அழுத்தம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
குருமூர்த்தி சொல்வது என்ன?
அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்வது ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாக தங்கள் ஆதரவை பெற்ற ஒருவரை தலைவராக்க வேண்டும் என்றும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைத்த அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்தால் மட்டுமே, எதிர்பார்த்த பலன் கிடைக்கும், திமுகவையும் வீழ்த்த முடியும் என ஆர்எஸ்எஸ் கருதுகிறதாம்.
செய்தியாளர் சந்திப்பில் குழப்பம்
தனியார் ஓட்டலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமித் ஷா தலைமையிலான செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக 7 நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தது. அதன்படி, பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அது பாஜக செய்தியாளர் சந்திப்பாக மாறியது. இதனால், பாஜக கூட்டணி இறுதியாகவில்லை என்பதும், கூட்டணி கட்சி தலைவர்களிடையே குழப்பம் நிலவுவதாகவும் தகவல் வெளியானது.
முட்டுக்கட்டை போடும் அதிமுக:
பாஜக உடன் கூட்டணி அமைத்தாலும், கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தக் கூடாது என, அமித் ஷாவை சந்தித்தபோதே எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க பாஜக வலியுறுத்துவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே , கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க முதலில் அதிமுக முன்வரவில்லை என கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அதைதொடர்ந்து, சற்றே இறங்கி வந்த பாஜக அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதோடு, அதிமுக உட்கட்சி விவகாரத்திலும் தலையிடமாட்டோம் என்றும் உறுதியளித்தது. அதன்பிறகே அமித் ஷா உடனான செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பங்கேற்றதாக கூறப்படுகிறது.
ராமதாஸ், TTV செக்
அன்புமணி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தால் பாஜக மற்றும் பாமக கூட்டணி உறுதியாகிவிடும் என்பதை உணர்ந்தே, முன்கூட்டியே செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பாமக தலைவர் பதவியை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதன் மூலம் பாமகவிற்கான முக்கியத்துவத்தை கூட்டுவதற்காகவே ராமதாஸ் இந்த திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என அமித் ஷா உறுதியளித்ததால், டிடிவி தினகரன் கூட்டணியில் இடம்பெறுவதும் கேள்விக்குறியானது. இதனால் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் போனால், அவமானமாக மாறலாம் என கருதியே டிடிவி தினகரன் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநயாக கூட்டணியில் இடம்பெற உள்ள கட்சிகளை இறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு வந்த அமித் ஷாவின் திட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறப்படுகிறது.





















