பொங்கல் பரிசு: ₹5000 வழங்க அதிமுக போர்க்கொடி! திமுக அமைதி காப்பது ஏன்? பரபரப்பை கிளப்பும் போஸ்டர்கள்!
"பொங்கலுக்கு ₹,5000 கொடுக்க வேண்டும் என அதிமுக போஸ்டர் அரசியலை தொடங்கியது "

தமிழர்களின் மிக முக்கிய விழாவாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை மதங்களைக் கடந்து தமிழர்கள் கொண்டாடும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும், தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்குவது வாடிக்கையாக இருக்கிறது. ஒரு சில காலகட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது, ரொக்கமாக பணமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ரொக்கமாக, ₹.5000 ரூபாய் பணம் வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ளனர். தமிழக அரசும் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் தேர்தல் என்பதால், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைக்கு ரொக்கும் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனால் ₹,5000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்
தேர்தல் நெருங்கி வருவதால் அரசு பொங்கல் பண்டிகையின் போது, 5000 ரூபாய் வழங்கினால் எங்களுடைய கோரிக்கையினால் தான் ₹5000 கிடைத்தது என பிரச்சாரம் செய்யவும், ஒருவேளை அரசு வழங்கவில்லை என்றால் ஏன் வழங்கவில்லை? என பொதுமக்கள் இடம் அதிருப்தியை ஏற்படுத்தவும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று ராயப்பேட்டை பகுதிகளில் அதிமுகவினர் பொங்கல் தொகுப்புடன் 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
அதிமுகவினர் கூறுவது என்ன ?
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசியபோது: எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, ‘தைப் பொங்கலுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்று போர்க்கொடி எழுப்பினார். இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பொங்கல் பரிசு பணம் குறித்து இன்னமும் அமைதியாக இருக்கிறது.
ஸ்டாலின் வைத்த வேண்டுகோளை இப்போது அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எழுச்சிப்பயணத்தில் வலியுறுத்தி வருகிறார். ஆட்சி முடியப்போகும் கடைசி காலகட்டத்திலாவது மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன் 5,000 ரூபாய் தைப் பொங்கலுக்குக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகிறார்.
இபிஎஸ் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று ராயப்பேட்டை பகுதிகளில் அதிமுகவினர் பொங்கல் தொகுப்புடன் 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று மக்களும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.





















