Arukutty on Sasikala: சசிகலா தலைமையை அதிமுக ஏற்க வேண்டும் - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி
சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படு தோல்வியினை சந்தித்த நிலையில் அதிமுக தலைமைக்கு சசிகலா வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் விதமாக சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழி நடத்த வேண்டும்” என தெரிவித்தார். மேலும் அதிமுக தலைமை சரியில்லாத காரணத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடந்திருந்தால் அதிமுக வென்றிருக்கும். அதிமுகவில் எனக்கு பொறுப்பு தரவில்லை என்பதற்காக சசிகலாவுக்கு ஆதரவாக நான் பேசவில்லை என்றார்.
மீண்டும் சசிகலா..
அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் சேர்க்க தேனி மாவட்ட அதிமுகவினர் வரும் 5ம் தேதி இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தேனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. அதிமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியலையே இந்த நிகழ்வு மிகவும் பரபரப்பு உள்ளாக்கி உள்ளது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படு தோல்வியினை சந்தித்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசும் போது அதிமுக படுதோல்வியை சந்தித்தற்கு பெரும்காரணமாக இருந்தது அமமுக என்றும், எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி கட்சியில் மீண்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக தீர்மானமும் போட்டபட்டு உள்ளது. குறிப்பாக சசிகலா மற்றும் தினகரனை குறி வைத்தே இந்த தீர்மானம் போடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வரும் 5ம் தேதி முறைப்படி தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. இதில் முறைப்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியும் சசிகலா தலைமை குறித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது