எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்.. அதிமுக எம்.எல்.ஏக்கள் நினைவூட்டல் கடிதம்!
எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ள நிலையில் அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ள நிலையில் அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்து நினைவூட்டல் கடிதம் அளித்தனர்.
தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக துணைக்கொறடா ரவி, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
தற்போது வரை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் பெயரிலேயே எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை நீடிக்கப்பட்டுவருகிறது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது கூட இதுவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையோ, துணைத் தலைவரோ மாற்றப்படவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்தநிலையில், இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த கடிதம் மீது சபாநாயகர் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து, நினைவூட்டல் கடிதம் ஒன்றை அளித்தனர்.
இன்று அளித்துள்ள கடித்தத்திற்கு சபாநாயகர் அப்பாவு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வருகின்ற பேரைவைக் கூட்டத்தில் ஓபிஎஸ் அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமரவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால், பேரவையை புறக்கணித்துவிட்டு, அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்த பிரச்னையை எழுப்ப அதிமுக கட்சி எம்.எல்.ஏக்கள் முற்படலாம்.
பேரவை விதி எண் 6ன் படி இருக்கைகளை முடிவு செய்யவேண்டியது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், அவரின் முடிவை எதிர்த்து பேரவையில் எந்த பிரச்னை செய்தாலும் அது உரிமை மீறலாகும். அதனால், பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.
சபாநாயகர் பரிசீலிப்பதாக கூறினார் - செங்கோட்டையன்:
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கபட வேண்டும் என 3வது முறையாக கோரிக்கை வைத்துள்ளோம். பொதுச்செயலாளர் பழனிசாமிதான் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
அடுத்த சட்டப்பேரவை கூட்டம் எப்போது...?
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி கூடுகிறது எனவும், கூட்டத்தொடர் எப்போதுவரை நடைபெறும் என்பது குறித்து சட்டமன்ற அலுவல் குழு முடிவு செய்யும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.