Edappadi Palaniswami: அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி 20 நிமிடம் தனியாக சந்திப்பு! டெல்லியில் நடந்தது என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் விலகியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 16) டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் விலகியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி:
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் ஏதாவது ஒரு புதுபுது பிரச்சனை வந்துகொண்டு இருக்கிறது. அண்மையில் ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு மரியாதை இல்லை அதனால் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து நாங்களும் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று அறிவித்தார்.
அதேபோல், என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை மாற்றி விட்டு வேறு ஒருவர் அறிவித்தல் மீண்டும் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளோம் என்று அறிவித்தார். கூட்டணி தான் இப்படி இருக்கிறது என்றால் மறுபுறம் அதிமுக கட்சிக்குள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி வருகிறார். அதோடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசியதாக சொன்னார். இவரது இந்த சந்திப்பு அதிமுகவினரிடையே பேசுபொருளானது.
அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ்:
இந்த நிலையில் தான் இன்று காலை டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் இல்லத்திற்கே இரவு 8 மணி அளவில் நேரடியாக சென்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். வேலுமணி கேபி முனுசாமி தம்பிதுரை சிவி சண்முகம் ஆகியோரை அழைத்துக்கொண்டு அமித்ஷாவை பார்க்க சென்ற இபிஎஸ் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் ஆலோசனை நடத்தியாத சொல்கின்றனர்.
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அறையை விட்டு வெளியே வந்த நிலையில். அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேல் தனிமையில் ஆலோசனை நடத்தியதாவும் சொல்கின்றனர் டெல்லி வட்டாரங்களில் . அப்போது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாக சொல்லப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமியின் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் அடுத்தது என்ன நடக்கும் அதிமுகவில் உள்ள பிரச்சனைகள் சரியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.





















