AIADMK: ஜெயக்குமாருக்கு எம்.பி சீட்? யோசனையில் ஈபிஎஸ்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் அதிமுக
AIADMK: எம்.பி சீட்டை கொடுத்து ஜெயக்குமார் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இபிஎஸ் ப்ளான் போடுவதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு சைலண்ட் மோடுக்கு போய்விட்ட ஜெயக்குமாரை சரிகட்ட மாநிலங்களவை எம்.பி சீட்டை கொடுக்கலாமா என இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயக்குமார்:
25 வருடமாக ராயபுரத்தின் முடிசூடா மன்னனா இருந்தேன், பாஜகவால தான் தோற்றேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைந்த பிறகு அப்செட்டாகி விட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி உறுதியானதில் இருந்தே ஜெயக்குமாரிடம் இருந்து கூட்டணிக்கு ஆதரவாக எந்த கருத்தும் வரவில்லை கூட்டணி முறிவை அறிவித்த ஜெயக்குமாரே, மீண்டும் கூட்டணி அமையும் போது அந்த மேடையில் இல்லாதது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. அதிமுக சார்பாக தினமும் செய்தியாளர்களை சந்தித்து வந்த ஜெயக்குமார், தற்போது அதனையும் நிறுத்திவிட்டார்.
ஈபிஎஸ் திட்டம்:
அவரது கோபத்தை தணிப்பதற்காக ஜெயக்குமாருக்கு மாநிலங்களவை எம்.பி சீட்டை ஒதுக்க இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்கின்றனர். தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
ஜுன் 19ம் தேதி மாநிலங்களவை எம்.பி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் களம் சூடுபிடித்துள்ளது. MLA-க்களின் பலத்தின் அடிப்படையில் அதிமுக கையில் 2 எம்.பிக்கள் சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதில் ஜெயக்குமாருக்கு எம்.பி சீட்டை கொடுத்து விடலாம் என இபிஎஸ் நினைப்பதாக தெரிகிறது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏ பதவியையும் இழந்த ஜெயக்குமார், தற்போது கட்சிப் பதவிகளில் மட்டுமே இருக்கிறார். அதுவும் பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டதால் 2026 தேர்தலிலும் ராயபுரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஜெயக்குமாருக்கு இருப்பதாக சொல்கின்றனர். அதனால் இந்த தடவை எம்.பி சீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என முரண்டு பிடித்து தான் ஜெயக்குமார் மௌனமாக இருப்பதாக பேச்சு இருக்கிறது.
எம்.பி பதவி:
கட்சியில் மூத்த தலைவர்கள் பலரும் எம்.எல்.ஏ எம்பிக்களாக இருக்கும் போது தனக்கு மட்டும் பதவி இல்லாமல் இருந்தால் செல்வாக்கு குறைந்துவிடுமோ என கணக்கு போட்டு ஜெயக்குமார் காய் நகர்த்தி வருவதாக சொல்கின்றனர். அதிமுகவில் சென்னையின் முகமாக இருக்கும் ஜெயக்குமார் தேர்தல் நேரத்தில் ஆக்டிவ்வாக இருப்பது கட்சிக்கு அவசியம் என்பதால் அவரை மீண்டும் வழிக்கு கொண்டு வருவதற்கு எம்.பி சீட்டை கொடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இபிஎஸ் ப்ளான் போடுவதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.





















