Mothers Day 2022: மே 8 அன்று கொண்டாடப்படும் அன்னையர் தினம்.. இதன் வரலாறு என்ன?
2022-ஆம் ஆண்டின் அன்னையர் தினம் வரும் மே 8 அன்று கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையின் போது, அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டின் அன்னையர் தினம் வரும் மே 8 அன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையின் போது, அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தாய்மையின் உழைப்பையும், அன்பையும் கொண்டாடுவதற்காக இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், அம்மாக்களின் இருப்பைக் கொண்டாடவும், அவர்களின் தியாகத்தைப் போற்றவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு அன்னையர் தினம் வரும் மே 8 அன்று அனுசரிக்கப்படுகிறது.
அன்னையர் தினத்தின் மூலமாக தாய்மார்களின் தியாகங்களுக்கு நன்றி செலுத்துவதற்கும், அவர்களுக்கு அன்பைப் பொழிவதற்கும் வாய்ப்பாக அமைகிறது. மேலும், தாய்மார்களின் முயற்சிகளுக்கான பாராட்டுகளையும், அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுகூர்வதற்கும் இந்த நாள் பயன்படுகிறது.
நம் வாழ்வின் இன்றியமையாத மனிதர்களாக நமது தாய்மார்கள் இருக்கிறார்கள். அந்நாளில் தாய்மார்களின் பணிகளைக் குடும்பத்தினர் தன் பொறுப்பாக எடுத்துச் செய்வது நல்லது. அந்த ஒரு நாளாவது தாய்மார்கள் தம் ஓய்வை அனுபவிக்கட்டும்.
கடந்த 1908ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மேற்கு விர்ஜினா மாகாணத்தில் உள்ள கிராஃப்டன் பகுதியின் புனித ஆண்ட்ரூ மெதாடிஸ்ட் தேவாலயத்தில் தன் தாயின் நினைவேந்தலை நடத்தினார் அன்னா ஜார்விஸ் என்ற அமெரிக்கப் பெண். அவர் 1905ஆம் ஆண்டு முதலே அன்னையர் தினத்தை அமெரிக்க அரசு அங்கீகரித்து விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தார். அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும், கடந்த 1941ஆம் ஆண்டு, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, அமெரிக்க அரசு மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அன்னையர் தினத்தை அனுசரிக்கத் தொடங்கியது.
அன்னா ஜார்விஸின் தாய் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது இருபக்கம் காயமடைந்த படை வீரர்களை மீட்டு, சிகிச்சை அளித்தவர். மேலும், அவர் பொது சுகாதாரத்தின் மேன்மை குறித்து சங்கம் அமைத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வந்தவர். தன் தாய் மேற்கொண்ட மகத்தான பணிகளை நினைவுகூறவும் உலகில் உள்ள அனைத்து தாய்களையும் கொண்டாடவும் `அன்னையர் தினம்’ என்ற நாளைக் கடைபிடிப்பதை வலியுறுத்தினார் அன்னா ஜார்விஸ்.
உலகம் முழுவதும் அன்னையர் தினம் அமலுக்கு வந்தது இவ்வாறு தான். இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு உலகம் முழுவதும் வரும் மே 8 அன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தாய்மார்களைக் கொண்டாடுவதாலும், அவர்களைப் போற்றுவதாலும், அன்னையர் தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து தாய்மார்களின் தியாகங்களையும் போற்றுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளின் அனைவரும் தங்கள் தாய்மார்களை அவர்களின் மதிப்பை உணர்ந்து மகிழ்விக்கும் நாளாக அனுசரிப்பது உலகம் முழுவதும் உள்ள வழக்கம்.