"மாவட்டத்தில் ஒரு குழந்தையும் விட்டுட கூடாது" மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு என்ன தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 12 -ம் தேதி 582 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேசிய அளவிலான பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற அக்டோபர் 12, 2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இளம்பிள்ளை வாதம் அற்ற ஒரு எதிர்காலத்தை உறுதிசெய்யும் நோக்குடன், மாவட்டம் முழுவதும் சுமார் 69,379 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கத் தயார் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 582 மையங்கள் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து விநியோகம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
582 மையங்கள் - 2,332 பணியாளர்கள்
இந்த ஒருநாள் முகாமினைச் சிறப்பாக நடத்துவதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 582 நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாபெரும் மக்கள் நலப்பணியில், சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, சத்துணவு, கல்வி, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என 2,332-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தப் பணியாளர்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடைவிடாமல் சொட்டு மருந்து வழங்கும் பணியை மேற்கொள்வார்கள்.
விடுபடக் கூடாது என்பதே நோக்கம்
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாவட்டத்தில் உள்ள 69,379 ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் எவரும் விடுபடாமல் சொட்டு மருந்து பெறுவதை உறுதி செய்வதே ஆகும். ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், இந்த முகாம் நாளன்று மீண்டும் ஒரு தவணை சொட்டு மருந்து கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில், குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தாலும் கூடத் தயங்காமல் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். ஏனெனில், இந்தக் குறுகியகாலத் தொந்தரவுகள் போலியோ தடுப்பு மருந்து வேலை செய்வதைத் தடை செய்யாது.
நடமாடும் குழுக்கள் மூலம் தீவிர விநியோகம்
இந்த முகாமின் மூலம் எந்த ஒரு குழந்தையும் விடுபட்டு விடக் கூடாது என்பதற்காக, இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. அதற்காக, மாவட்டம் முழுவதும் நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் வயல்களில் குடியிருப்போர், சாலையோரக் குடியிருப்புகள், செங்கல் காளவாய் குடியிருப்புகள், கல்குவாரிகள், பெரிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் திருவிழா நடைபெறும் கூட்டப் பகுதிகள் போன்ற இடங்களுக்குச் சென்று, அங்குள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். இவ்வாறு விடுபட்ட பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவதன் மூலம், போலியோ வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆட்சியர் அழைப்பு
இம்முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "பொதுமக்கள் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை வரும் அக்டோபர் 12, 2025 அன்று நடைபெறும் முகாமிற்குத் தவறாமல் அழைத்து வந்து சொட்டு மருந்து வழங்கிட வேண்டும். அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, 'இளம்பிள்ளை வாதம் இல்லாத எதிர்கால இந்தியாவை உருவாக்கி, குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்திடும்படி' கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.























