ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைப்பு - புதிய தேதி அறிவிப்பு..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற மே 16 -ம் தேதி நடைபெற இருந்த ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை செவிமடுத்து, அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறைதீர்வு கூட்டம் 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மாற்றப்பட்ட தேதி
இந்நிலையில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவிருந்த இந்த கூட்டமானது தற்போது நிலவும் கடும் வெப்பநிலையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, கோடை காலத்தில் கடும் வெப்பநிலையின் காரணமாக ஓய்வூதியர்களின் கோரிக்கையை ஏற்று 16.05.2025 (வெள்ளிகிழமை) நடைபெறுவதாக இருந்த மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டமானது இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக 27.06.2025 (வெள்ளிகிழமை) அன்று நடைபெறும்.
விண்ணப்பம் செய்ய காலம் நீடிப்பு
மேலும், இந்த குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்று தங்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, குறைதீர்ப்பு விண்ணப்பங்களை பெறுவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பிக்க கால அவகாசம் போதுமானதாக இல்லை என்ற ஓய்வூதியர்களின் வேண்டுகோளை ஏற்று, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது 23.05.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தங்களது ஓய்வூதிய பலன்கள் இன்னும் கிடைக்கப்பெறாத ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குறைகளை முறையிடலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றும், இதுவரை தங்களது ஓய்வூதியம் தொடர்பான பலன்கள் கிடைக்காத ஓய்வூதியதாரர்கள் தங்களது குறை தொடர்பான மனுக்களை தயார் செய்து அனுப்பலாம். மனுக்கள் இரட்டை பிரதிகளில் தெளிவாக கையால் எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ அனுப்பப்பட வேண்டும்.
குறைதீர்வு மனுவில் பின்வரும் விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்:
- ஓய்வூதியதாரரின் முழு பெயர், பதவி மற்றும் தற்போதைய முகவரி.
- ஓய்வு பெறும் போது பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர்.
- ஓய்வு பெற்ற நாள் மற்றும் ஆண்டு.
- ஓய்வூதியம் தொடர்பாக நிலுவையில் உள்ள குறைகளின் முழு விவரம். குறை என்ன? எப்போது முதல் நிலுவையில் உள்ளது? இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும்.
- அந்த குறைகள் தற்போது எந்த அலுவலகத்தில் அல்லது எந்த அலுவலரிடத்தில் நிலுவையில் உள்ளது என்ற விவரம். தெரிந்தால் சம்பந்தப்பட்ட அலுவலரின் பெயர் மற்றும் பதவி ஆகியவற்றை குறிப்பிடவும்.
- ஓய்வூதியம் தொடர்பான கொடுப்பாணை எண் (Pension Payment Order Number - PPO Number). இது தெரிந்தால் தவறாமல் குறிப்பிடவும்.
- ஓய்வூதியதாரரின் கைபேசி எண் (Mobile Number). இது குறை தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும், தேவைப்படும்போது உங்களை தொடர்புகொள்வதற்கும் மிகவும் அவசியமானது.
பூர்த்தி செய்யப்பட்ட குறைதீர்வு மனுக்களை கீழ்காணும் முகவரிக்கு 23.05.2025 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மன்னம்பந்தல்,
மயிலாடுதுறை – 609 305.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, புதிய தேதியில் நடைபெறவிருக்கும் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்கவும், அதற்கு முன்னதாக தங்களது குறை தொடர்பான மனுக்களை உரிய முகவரிக்கு அனுப்பி வைத்தும் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஒத்திவைப்பு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பதை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.























