"எங்களுக்குப் புற்றுநோய் வந்துடும்!" - மயிலாடுதுறையில் அஞ்சும் பொதுமக்கள்: வீதிக்கு வந்து போராட்டம்!
மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சியில் புதிய செல்போன் டவர் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் புதிதாக செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கும் பணிக்கு அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் பணியைத் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அமுதம் நகர் முதல் சொக்கலிங்கம் நகர் வரை - நீடிக்கும் சர்ச்சை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் செல்போன் டவர்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் டவர் அமைப்பதற்காக இடங்களைத் தேர்வு செய்தபோது, கதிர்வீச்சு அச்சம் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறையை அடுத்த அமுதம் நகர் பகுதியில் செல்போன் டவர் அமைக்க முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், அங்கும் அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, டவர் அமைக்கும் தனியார் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி, உரிய காவல்துறை பாதுகாப்போடு அமுதம் நகரிலேயே டவரை அமைத்துக் கொள்ள முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு மற்றும் அனுமதி பெறப்பட்ட அமுதம் நகரில் டவரை அமைக்காமல், தனியார் நிறுவனம் விதிகளை மீறி அதற்கு அருகே உள்ள வள்ளாலகரம் ஊராட்சிக்குட்பட்ட சொக்கலிங்கம் நகர் பகுதியில் திடீரென புதிய டவர் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம்
அனுமதி பெறப்பட்ட இடத்தை விட்டுவிட்டு, குடியிருப்பு பகுதிகள் நிறைந்த சொக்கலிங்கம் நகரில் டவர் அமைக்கும் பணி நடைபெறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு, டவர் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே சொக்கலிங்கம் நகர் பகுதியில் புதியதாக டவர் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்திற்கு மிக அருகிலேயே மற்றொரு தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் இரண்டாவது டவரை அமைப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
புற்றுநோய் அச்சம் - பொதுமக்கள் வேதனை
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்ததாவது; "எங்கள் பகுதியில் ஏற்கனவே ஒரு செல்போன் டவர் இயங்கி வருகிறது. இப்போது அதற்கு அருகிலேயே மேலும் ஒரு டவரை அமைக்க முயல்கிறார்கள். ஒரே பகுதியில் அடுத்தடுத்து செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டால், அதிலிருந்து வெளியாகும் அதிகளவிலான கதிர்வீச்சு (Radiation) காரணமாகப் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
முக்கியமாக, டவர் கதிர்வீச்சு காரணமாக எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதோடு, குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சுகாதாரச் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய டவர் எங்களது வாழ்வாதாரத்தையும் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும்" என வேதனையுடன் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகத்திற்குச் கோரிக்கை
எனவே, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு சொக்கலிங்கம் நகரில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் புதிய செல்போன் டவர் அமைக்கும் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் மூலம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ள அமுதம் நகர் பகுதியிலேயே அந்த நிறுவனம் டவரை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் பலத்த எதிர்ப்பையும் போராட்டத்தையும் தொடர்ந்து, டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் வள்ளாலகரம் சொக்கலிங்கம் நகர் பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அடுத்தகட்டமாகப் பெருந்திரள் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















