'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபருக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையால் நடப்பாண்டில் மட்டும் 33 பேர் தடுப்புக் காவலில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் சட்டவிரோதமாக புதுச்சேரி மாநில மதுபானங்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்குத் தொடர்ந்து பல்வேறு புகார்களும் ரகசியத் தகவல்களும் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. சினேஹா பிரியா நேரடி வழிகாட்டுதலின் கீழும், சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சீர்காழி தென்னலக்குடி பகுதியில் அதிநவீன நான்குசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி மிக நேர்த்தியாகப் புதுச்சேரி சாராயத்தை கடத்தி வந்து ரகசியமாக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல் துறையினர் சிறப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ரகசியத் தகவலும் அதிரடி வாகனச் சோதனையும்
கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதியன்று (23.07.2026) மயிலாடுதுறை மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளரும், சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு பொறுப்பு ஆய்வாளருமான ராஜேஷ் தலைமையில், சிறப்பு காவல் ஆளினர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. வைதீஸ்வரன்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட தென்னலக்குடி பாலம் அருகே இந்த மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் மிகத் தீவிரமான வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த 'ஸ்விப்ட் டிசையர்' (Swift Dzire) ரக சொகுசு நான்குசக்கர வாகனத்தை (பதிவெண்: PY 02 P 6633) காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் மறித்து நிறுத்தினர். அந்த நான்குசக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் முழுமையாகச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையின் போது, காரின் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பாண்டிச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட பெருமளவிலான புதுச்சேரி சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாகக் கைப்பற்றப்பட்டது. மேலும், சாராயக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொகுசு நான்குசக்கர வாகனமும் காவல் துறையினரால் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளி கைது மற்றும் நீதிமன்றக் காவல்
சாராயக் கடத்தலில் ஈடுபட்ட காரை ஓட்டிவந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி தாலுக்கா, திருவேட்டக்குடி பகுதியில் உள்ள காலனி தெருவைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மகன் ரகுராமன் (வயது 46) என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
சட்டவிரோதமாகச் சாராயம் கடத்தி வந்து சட்ட ஒழுங்கிற்கும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ரகுராமனை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவரை உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஸ்விப்ட் டிசையர் நான்குசக்கர வாகனமானது, அரசுக்குச் சொத்தாக மாற்றப்பட்டு, அரசுக்கு வருவாய் ஈட்டும் பொருட்டு பொது ஏலத்தில் விடுவதற்கான சட்டப்பூர்வமான மேல் நடவடிக்கைகளுக்கு உடனடியாக உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மற்றும் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட ரகுராமன் தொடர்ந்து மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், இவரது செயல்பாடுகள் அப்பகுதியில் அமைதியற்ற சூழலை உருவாக்குவதாலும், இவரைச் சாதாரணச் சட்டப் பிரிவுகளின் கீழ் விட்டுவிட்டால் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவார் என்பதை உணர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா , ரகுராமன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் (Preventive Detention Act) கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். இதற்கான விரிவான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்குக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை தீவிரமாகப் பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், பொது அமைதியைப் பேணிக் காக்கும் பொருட்டும், மதுவிலக்குக் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டும், எதிரியான ரகுராமனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையிலடைக்கக் கடந்த 17.08.2026 அன்று முறைப்படி உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியரின் அந்த உத்தரவின்படி, இன்று (18.08.2026) சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு பொறுப்பு ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல் ஆளினர்கள் அடங்கிய குழுவினர், ரகுராமனைக் கடலூர் மத்திய சிறைக்குப் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அங்கு அடைத்தனர்.
மாவட்டத்தில் தீவிரமடையும் தடுப்புக் காவல் நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தவும், சமூக விரோதிகளை ஒடுக்கவும் காவல் துறை சார்பாகக் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் பல்வேறு தீவிர குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. கொலைக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 05 நபர்கள், பொது அமைதிக்குக் கடுமையான பங்கம் விளைவித்த 08 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 07 நபர்கள், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 02 நபர்கள் என மொத்தம் 33 நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமூக விரோதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எவ்விதத் தாட்சணியமுமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















