5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 21-ல் நடைபெற உள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை வேலையில்லா இளைஞர் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், எதிர்வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக வளாத்தில் அன்றைய தினம் காலை 10:00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், முற்றிலும் இலவசமாகவே அனைத்துச் சேவைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு
இந்த வேலைவாய்ப்பு முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமன்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்கவுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிட நிரப்பலுக்காகத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளன.
இம்முகாமின் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைதேடும் உள்ளூர் இளைஞர்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களை அணுகித் தங்களுக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுக்கும் நல்வாய்ப்பு உருவாகியுள்ளது.
கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆணும் பெண்ணும் பங்கேற்கலாம். குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் வரை அனைவரும் இதில் விண்ணப்பிக்கலாம். மேலும், டிப்ளமோ (Diploma), ஐ.டி.ஐ (ITI), பி.இ (B.E) போன்ற தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் மற்றும் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்ற இதர பட்டதாரிகளும் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பைப் பெற இம்முகாம் ஒரு சிறந்த களமாக அமையும்.
சிறப்புச் சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
இம்முகாம் வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், இளைஞர்களின் எதிர்கால தொழில்முறை வளர்ச்சிக்கான பல கூடுதல் வழிகாட்டுதல்களையும் வழங்கவுள்ளது. 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் வாயிலாக இளைஞர்களுக்குத் தேவையான பல்வேறு தொழிற்திறன் பயிற்சிகள் குறித்த விவரங்கள் வழங்கப்படவுள்ளன.
சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு தேவையான வங்கிக் கடன் வசதிகள் மற்றும் ஆலோசனைகள் இம்முகாமில் பெற முடியும். மேலும், அயல்நாடுகளுக்குச் சென்று வேலை செய்ய விரும்புபவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள் மற்றும் இணையதளப் பதிவு
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் தங்களது முழுமையான சுய விவர அறிக்கை (Bio-Data), கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், அடையாளச் சான்றாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முன் அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் நேரில் வர வேண்டும்.
அத்துடன், இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்களும் மற்றும் வேலைநாடுநர்களும் தங்களது சுய விவரங்களை தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் முன் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆட்சியர் அழைப்பு மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய எண்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்றுத் தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களை நேரடியாகத் தேர்வு செய்துகொள்ளலாம். எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி நேரில் கலந்துகொண்டு பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 04364299790 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தெளிவுபெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















