மயிலாடுதுறை படுகொலை: தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 11 பேர் சரண்! பின்னணியில் பழிக்குப்பழி?
காரைக்கால் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் உட்கட்சி தேர்தலுக்கான நிர்வாகிகள் விருப்பமனு பெறும் கூட்டம் கடந்த ஜுலை 4 -ம் தேதி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு விருப்பமனு தாக்கல் செய்தனர்.
தவாக நிர்வாகி படுகொலை
இக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மணிமாறன் கலந்து கொண்டு விருப்பமனு கொடுத்துவிட்டு தனது காரில் புறப்பட்டு காரைக்காலுக்கு சென்றுள்ளார். அப்போது மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து இரண்டு கார்களில் வந்த ஏழு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் மணிமாறனின் காரை வழிமறித்து, கார் கண்ணாடிகளை உடைத்து மணிமாறனை வெளியில் இழுத்து கொடூர ஆயுதங்களால் அவரின் முகத்தில் சரமாரியாக முகம் சிதைந்தயும் அளவிற்கு வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் பரிதாபமாக துடித்து உயிரிழந்தார்.

மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் கொலை வழக்கு குற்றவாளி
இறந்த மணிமாறன் கடந்த 2021 -ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்து தேவமணி கொலை வழக்கில் முதலாவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐந்து தனிப் படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர்.

மணிமாறன் சகோதரர் புகார்
இந்நிலையில் இறந்த மணிமாறனின் அண்ணன் காளிதாசன் என்பவர் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் காரைக்காலில் கொலை செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தேவமணியின் மகன் பிரபாகரன், தேவமணியின் மைத்துனர் காவல்துறையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணி புரியும் மணக்குடி ராமமூர்த்தி அவரது மகன் அருண்குமார், திருநள்ளார் அரக்குடியைச் சேர்ந்த புருஷோத்தமன் அத்திப்பொடுகையைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் இந்த படுகொலை நடைபெற்றிருக்க வேண்டும் என்றும், நான் குறிப்பிட்ட எதிரிகளை கைது செய்து உரிய விசாரணை மேற்கொண்டு தன் தம்பியின் படுகொலைக்கு நீதி வழங்கும் மாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பழிக்கு பழி நடைபெற்ற சம்பவம்
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2021-ம் ஆண்டு காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் பகுதியை சேர்ந்த தேவமணி என்பவர் இடப்பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மேற்படி இறந்து போன மணிமாறன் என்பவர் முதல் குற்றவாளி ஆவார். மேற்கண்ட தேவமணி கொலை வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் நிலையில், தேவமணி கொலைக்கு பழிக்கு பழியாக இக்கொலை நடந்திருப்பதும், இக்கொலைக்கு தேவமணியின் மகன் பிரபாகரன் முளையாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

11 பேர் காவல்நிலையத்தில் சரண்
மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய மயிலாடுதுறை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்றையதினம் 06.07.2025 -ம் தேதி கொலை வழக்கு தொடர்பாக திருநள்ளார் தேவமணி மகன் பிரபாகரன், திருநள்ளார் பாண்டியன் மகன் 45 வயதான வீரமணி, திருநள்ளார் பூமங்கலம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் 23 வயதான குணசேகரன், நெடுங்காடு முருகன் (23) ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம், பாலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

மேலும், மேற்கண்ட கொலை வழக்கு தொடர்பாக மணிகண்டன் (36), சரவணன் (33), சுகன்ராஜ் (29), சரவணன் (28), அஜய் (22), முகிலன் (22), விஜயசங்கர் (30) ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இவ்வழக்கு தொடர்பாக 11 பேர் மேலும் இவ்வழக்கு தொடர்பாக செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் வழக்கின் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.






















