Danish Fort: கடலுக்கு இரையாக காத்திருக்கும் ‘டேனிஷ் கோட்டை’; என்ன செய்யப் போகிறது அரசு?
Tharangambadi Danish Fort: உலகப்புகழ் பெற்ற தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையினை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க கருங்கற்கள் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tharangambadi Danish Fort: தொடர் கடல் அரிப்பால் பாதிப்புக்கு ஆளாகி வரும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
400 ஆண்டுகள் பழமையான டேனிஷ் கோட்டை
கி.பி 1620 -ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டினர் இந்தியாவில் தங்களது வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்தனர். அதற்காக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை தேர்வு செய்த அவர்கள், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகளில் அந்த பிரமாண்ட கோட்டையானது கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை இருப்பிடமாக அது அமைந்தது.

ஏற்றுமதி - இறக்குமதி
உலகின் பல்வேறு நாடுகளுக்கு தரங்கம்பாடியில் இருந்து நெல், உப்பு, பருத்தி ஆடைகள், வாசனை திரவியங்கள் என பல பொருட்களை கடல் மார்க்கமாக ஏற்றுமதி செய்தும், பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்தும், மிகப்பெரிய வணிக மையமாக நடத்தி வந்தனர். மேலும் தாங்கள் ஆட்சி செய்த காலங்களில் டேனிஷ்கோட்டையை தங்களது அடையாள சின்னமாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.
அருங்காட்சியகம்
400 ஆண்டுகள் பழமையாகியும் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோட்டையின் செயல்பாடு அகழ்வைப்பத்தில் 14,15,16- ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள், 1200 ஆம் ஆண்டு கால சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருள்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள், டேனிஷ் கால பத்திரங்கள், போர்க் கருவிகள், 16 -ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள் என ஏராளமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

படையெடுக்கும் சுற்றுலா வாசிகள்
மேலும், கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க புராதான சின்னமாக டேனிஷ் கோட்டை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் விழா காலங்களில் வந்து செல்வது வழக்கம். வெளி மாநிலம், மாவட்டம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர்.

கடல் சீற்றம்
தரங்கம்பாடியில் உயர்ந்து நிற்கும் பழமையான தேவாலயங்கள், கவர்னர் மாளிகை, அலுவலக கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள் என ஒவ்வொரு கட்டடங்களையும் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு கட்டி அமைத்துள்ளனர். திரும்பும் திசையெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்து காணப்பட்டாலும், தரங்கம்பாடியின் அடையாளங்களில் ஓன்றாகவும், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா விரும்பிகளின் மனம் கவர்ந்ததாகவும், கம்பீரமாய் காட்சி அளிக்கும் டேனிஷ் கோட்டையின் மறுபக்கம் கடல் அலைகளில் சீற்றத்தால் பாதிக்கபட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட நிவர், புரொவி, மிக்ஜம்,பெஞ்சல் புயல்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு கோட்டையின் தடுப்புச்சுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் இடிந்து விழுந்தது. மேலும் தற்போது ஏற்பட்டுவரும் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டையின் பிரதான சுவர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சேதமடையும் சுவர்
கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஏற்கனவே இரு முறை கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் கடல் நீரில் சேதமடைந்த நிலையில், கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் தற்போது சேதமடைய தொடங்கியுள்ளது. எனவே, டேனிஷ்கோட்டையை பாதுகாக்கும் விதமாக, ஏற்கனவே தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகம் முதல் அமைக்கப்பட்டுள்ள கருங்கற்கள் தடுப்புச்சுவரை டேனிஷ்கோட்டையை தாண்டி நீட்டித்து அமைக்க வேண்டும் என தரங்கம்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலரும், தரங்கம்பாடி பேரூராட்சி துணைத்தலைவருமான பொன்.ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோரிக்கை
மேலும் அவர் கூறுகையில், தற்போது 3 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் டேனிஷ்கோட்டையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய - டேனிஷ் கலாச்சாரத்தையும், நட்புறவையும் பேணி பாதுகாப்பது போல டேனிஷ்கோட்டையும் எந்தவித பாதிப்புமின்றி கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க தமிழ்நாடு அரசு, தொல்லியல்துறையும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கோட்டையை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் போதே கோட்டையை சுற்றி கருங்கற்கள் பாதுகாப்பு தடுப்பு சுவரை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் கடல் சீற்றம் அதிகரித்து வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே கோட்டையை சுற்றி கடற்கரையோர பகுதி முழுவதும் நிரந்தர கருங்கள் தடுப்புச்சுவர் அமைக்க தொல்லியல் துறையினர் தமிழ்நாடு அரசுக்கு இது குறித்து அறிக்கை அனுப்பி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















