சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
மயிலாடுதுறை சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரத்தில், பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரி பாமக, வன்னியர் சங்கம், முக்குலத்தோர் அமைப்புகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாத்தன்குடி கிராமத்தில் காதல் ஜோடி உயிரிழந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கோரியும், பொய் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் பாமக, வன்னியர் சங்கம் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகள் இணைந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
பின்னணி என்ன?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த சாத்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபன் (22) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி இருவரும் அப்பகுதியில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் ஆத்திரமடைந்து, சிறுமியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி அமைப்புகள், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன் தொடர்ச்சியாக, சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன் உட்பட 5 பேரை காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
பல்வேறு சமுதாய அமைப்புகள் கூட்டாகப் போராட்டம்
இச்சூழ்நிலையில், ஜூன் 30-ஆம் தேதியே தனது மகளைக் காணவில்லை என்று தந்தை லட்சுமிகாந்தன் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சிறுமியின் குடும்பத்தினர் மீது ஒருதலைப்பட்சமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், மாவீரன் வன்னியர் சங்கம், அகில இந்திய முக்குலத்து புலிப்படை, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை, அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கூட்டாக இணைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - போலீஸாருடன் தள்ளுமுள்ளு
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையிலும், தடையை மீறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகத் திரண்டு வந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஆட்சியர் அலுவலக வளாகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர், பிரதான வாயில் கதவுகளைப் பூட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலுவலக வாயில் எதிரே திரண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரியும், காவல்துறையைக் கண்டித்தும் விண் அதிர கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் போலீஸார் உள்ளே அனுமதிக்க முயன்றபோது, அங்கிருந்த தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு நிலவரம் கையை மீறிச் செல்லும் பதற்றம் உருவானது.
ஆட்சியரிடம் மனு - அடுக்கடுக்கான கோரிக்கைகள்
அதனைத் தொடர்ந்து, பாமக மற்றும் பல்வேறு சமுதாய சங்கங்களின் முக்கியப் பொறுப்பாளர்களான வி.ஜி.கே.மணி, சிற்றரசு தேவர், பாக்கம் சக்திவேல், ஏபிபி ராஜா, ஆறு தேவர், ஆலயமணி மற்றும் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்
போலீஸாரின் மெத்தனம்: சிறுமியைக் காணவில்லை என்று தந்தை புகார் அளித்தபோதே காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தேடியிருந்தால், இந்த இரட்டை உயிர் பலியைத் தடுத்திருக்கலாம். காவல்துறையின் அலட்சியமே இந்தத் துயரத்திற்குக் காரணம்.
பொய் வழக்குகள் ரத்து: சிறுமியின் குடும்பத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது மட்டுமின்றி, தற்கொலைக்குத் தூண்டியதாகவும் கூடுதல் வழக்குப் பதிவு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சாதிப் பெயரைப் பயன்படுத்தி இது போன்ற பொய் வழக்குகள் பதிவு செய்வதைத் தடுக்க வேண்டும்.
போக்சோ சட்டத்தில் நடவடிக்கை: உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
நிவாரணம் மற்றும் அரசு வேலை: பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட அவர்களது வீட்டிற்குப் பதிலாகப் புதிய வீடு கட்டித் தரப்பட வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இப்போராட்டத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
Before You Go
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள் "நிலத்தை புடுங்க பார்க்குறியா"
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























