UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் தனியார் கேபிள்களுக்கு ரூ.50,000 லஞ்சம் கோரப்பட்ட சம்பவம் அம்பலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில்வே கோட்டத்தில், தகுந்த உரிமம் (License) இன்றி மேம்பாலங்கள் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு கேபிள்களுக்காக ரூ.50,000 வரை லஞ்சம் கோரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆடியோ மற்றும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ரயில்வே விஜிலன்ஸ் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
விதிகளை மீறி செயல்படும் தனியார் நிறுவனங்கள்
ரயில்வே இருப்புப் பாதை தண்டவாளங்களை மேம்பாலங்களின் வழியாகவோ அல்லது நிலத்தடி (Underground) பாதைகள் வழியாகவோ கடந்து செல்லும் தனியார் ஃபைபர் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள் இணைப்புகளுக்கு, ரயில்வே நிர்வாகத்திடம் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தி, தடையில்லாச் சான்று (NOC) பெற்ற பின்னரே கேபிள் இணைப்புகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது கடுமையான விதியாகும்.
ஆனால், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் உள்ள சாரங்கபாணி ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களின் வழியாக, எந்தவித அனுமதியும் கட்டணமும் இன்றி 15-க்கும் மேற்பட்ட தனியார் கேபிள் இணைப்புகள் முறையற்ற வகையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது தற்செயலாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ரூ.50,000 லஞ்சம்: அம்பலமான ஆடியோ மற்றும் UPI ஆதாரங்கள்
முறையான உரிமம் இல்லாமல் கேபிள்களைக் கொண்டு சென்ற தனியார் நிறுவனங்களிடம், அன்றைய காலகட்டத்தில் பணியில் இருந்த ரயில்வே உயர் அதிகாரியான சீனியர் செக்சன் என்ஜினியருக்காக (SSE) லஞ்சம் கேட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே ட்ராலிமேனாகப் பணிபுரியும் கார்த்தி என்பவர், லஞ்சம் கேட்டு தனியார் கேபிள் நிறுவன உரிமையாளரிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஆடியோ உரையாடலின் சுருக்கம்
"முறையான லைசென்ஸ் இல்லாமல் மேம்பாலம் வழியாகச் செல்லும் கேபிள் இணைப்புகளுக்கு, எனது உயரதிகாரி தலா ரூ.50,000 லஞ்சமாக எதிர்பார்க்கிறார். இதைக் கொடுத்தால் மட்டுமே கேபிள்களை தொடர்ந்து இயக்க முடியும்." என அந்த உரையாடல் உள்ளது. இந்த ஆடியோவைத் தொடர்ந்து, தனியார் நிறுவன நபர் லஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை யுபிஐ (UPI) செயலி மூலம் செலுத்திய ஆதாரமும் வெளியாகியுள்ளது. அதில், கடந்த டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முறையே ரூ.8,000 மற்றும் ரூ.20,000 என மொத்தம் ரூ.28,000 இரண்டு தவணைகளாகச் செலுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மேலதிகாரிகளின் அலட்சியமும் ஊழியர்களின் கொந்தளிப்பும்
ரயில்வே துறைக்கு நேர்மையான முறையில் வர வேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய், சில ஊழல் அதிகாரிகளின் சுயநலத்தால் தனிநபர்களின் பைகளுக்குச் சென்றுள்ளது. இது குறித்து நேர்மையான ரயில்வே ஊழியர்கள், தகுந்த ஆதாரங்களுடன் ரயில்வே துறை மேலதிகாரிகளுக்கும், ரயில்வே விஜிலன்ஸ் (Railway Vigilance) அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை புகார் அனுப்பியுள்ளனர்.
இருப்பினும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தவறு செய்த அதிகாரிகளைக் காப்பாற்றச் சிலர் முயல்வதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
அரசுக்குச் சேர வேண்டிய வருவாயைச் சூறையாடி, லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட உயர் அதிகாரி மற்றும் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட ட்ராலிமேன் கார்த்தி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெளியாகியுள்ள ஆடியோ மற்றும் யுபிஐ பரிவர்த்தனை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தென்னக ரயில்வே பொதுமேலாளர் மற்றும் விஜிலன்ஸ் துறை உடனடியாகத் தலையிட்டு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், லஞ்சப் புகாரில் தொடர்புடைய அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ரயில்வே ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
Before You Go
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























