இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பூம்புகார் சுற்றுலா மையம் - அமைச்சர் மெய்யநாதன் உறுதி...!
பூம்புகார் சுற்று வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
மேம்படுத்தப்பட்டு வரும் பூம்புகார் சுற்றுலா வளாகம் இன்னும் இரண்டு மாதங்கள் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
பூம்புகார் சுற்றுலா வளாகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் சுற்று வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துக்கொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் 23 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூம்புகார் சுற்றுலா வளாகம் மேம்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
அதனைத் தொடர்ந்து சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பூம்புகார் சுற்றுலா தளத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞரால் 1973 -ல் இந்த பூம்புகார் சுற்றுலா வளாகம் திறக்கப்பட்டது. பூம்புகார் சுற்றுலா அலுவலகம் 1975 ஆம் அண்டு திறக்கப்பட்டது. அந்தவகையில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் இந்த மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பூம்புகார் சுற்றுலா வளாகத்தை 23 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுத்தம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இரண்டு மாத காலத்திற்குள் முடிவடையும் பணிகள்
அந்தவகையில் சுற்றுலா வளாகத்தில் சுற்றுசுவர், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறைகள், பொருள் வைப்பறை, நுழைவுச்சீட்டு அறை, தகவல் கூடம், பாரம்பரிய விளக்கு வசதி, கலைவேலைப்பாடு, சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் சுற்றுலா வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தி, ஆலம், அரசன், இலுப்பை, புங்கை, மகாகனி, தென்னை மரம் அலமண்டா கிரீப்பர், ஆக்கலிபா கிரிடம், காப்பர் பாட் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படும். இங்குள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இரண்டு மாத காலத்திற்குள் இப்பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. மிக விரைவாகவும் இப்பணிகள் நடைபெற்று முடிவடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புயல் பாதுகாப்பு மையங்கள்
மேலும் கொள்ளிடம் வட்டாரம் முதலைமேடு திட்டு கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையம் 7 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நாதல்படுகை கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையம் 7 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலும் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதற்கான இடம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று, விரைவில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்படும். அப்பகுதி மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மேற்கொள்ளும்.
உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவாலங்காட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று காரைமேடு பகுதியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகத்துவாரம் தூர்ந்து போய் உள்ள கடலோர கிராமங்களில் தூர் வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.