கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
சீர்காழி அருகே கூட்டுக் கொள்ளை சதியில் ஈடுபட்ட பிரபல ரௌடி மொட்டை சிவா குண்டர் சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சீர்காழி அருகே கூட்டுக் கொள்ளை சதியில் ஈடுபட்ட பிரபல ரௌடி மொட்டை சிவா குண்டர் சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகனான மொட்டை சிவா (எ) சிவா (44) என்பவர் நீண்டகாலமாக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒரு முக்கிய ரௌடியாவார். இவர் மீது ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் போக்கிரி சரித்திர பதிவேடு (History Sheet) துவங்கப்பட்டு, காவல் துறையினரால் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த 18.07.2026 ஆம் தேதியன்று கொள்ளிடம் ஆற்றங்கரை ரயில்வே சுரங்கப்பாதை அருகே மொட்டை சிவா தனது கூட்டாளிகளுடன் ரகசியமாக ஒன்றுகூடி, அப்பகுதியில் பெரும் கூட்டுக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்த போது ஆணைக்காரன்சத்திரம் காவல் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றக் காவல் மற்றும் குண்டர் சட்டப் பரிந்துரை
கைது செய்யப்பட்ட மொட்டை சிவா மீது ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், எதிரி மொட்டை சிவா தொடர்ந்து பொது அமைதிக்குக் கடும் பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை காவல் துறை கண்டறிந்தது.
இதனால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சினஹா பிரியா, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவும் சிறை அடைப்பும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எதிரி மொட்டை சிவாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, 14.08.2026 ஆம் தேதியன்று ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சுகுணா மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய குழுவினர் எதிரி மொட்டை சிவாவை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மாவட்டத்தில் 29 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நடப்பாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பொது அமைதியை உறுதி செய்யும் வகையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 29 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கொலைக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 05 நபர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 08 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 06 நபர்கள், கஞ்சா விற்பனை குற்றங்களில் ஈடுபட்ட 09 நபர்கள் மற்றும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 01 நபர் ஆகியோர் அடங்குவர்.
சமூக விரோதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை
பொதுமக்களை அச்சுறுத்தும் ரௌடிசியத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























