Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
தமிழக அரசு இளைஞர்களிடையே மிக தீவிரமாக பரவி வரும் போதை பழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான முயற்சியில் களமிறங்கி உள்ள நிலையில் பள்ளி மாணவிகள் இருவர் மது அருந்தும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி வகுப்பறை முன் இரு மாணவிகள் மது அருந்திய வீடியோ மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை ஒழிப்பில் தமிழக அரசு தீவிரம்
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு இளைஞர்களிடையே மிக தீவிரமாக பரவி வரும் போதை பழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான முயற்சியில் களமிறங்கி உள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களிடையே போதை தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் இரு மாணவிகள் வகுப்பறை முன்பு மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.
மது அருந்தும் மாணவிகள் - சிக்கிய நபர்
உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை விசாரணை நடத்தியதில் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கிய நிலையில் பள்ளி தலைமை ஆசிரியரான பிரமிளா ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டார். அவர் வடசேரியில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் முதலில் பள்ளியின் படிக்கும் சக மாணவர்கள் மீது போலீசாரின் சந்தேக பார்வை திரும்பியது. ஆனால் இதில் அவர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்ததாக தக்கலை பகுதியைச் சேர்ந்த 40 வயதான ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பால் பாக்கெட் போடும் பணியை மேற்கொண்டு வரும் ராஜ்குமார் சம்பந்தப்பட்ட மாணவிகளில் ஒருவர் வீட்டுக்கு நன்கு அறிமுகமானவராக உள்ளார். நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க வேண்டும் என மாணவி கேட்டதால் எதைப் பற்றியும் யோசிக்காமல் ராஜ்குமார் மது வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
களத்தில் இறங்கி 6 மணி நேரத்தில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. அதே சமயம் தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மற்றும் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி வருவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















