சீர்காழி அருகே சோலார் பவர் பிளான்ட்; கிராம மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டம் அமல் - ஆட்சியர் அதிரடி உத்தரவு
சோலார் பிளான்ட் நிர்வாகிகள் தங்கள் திட்டம் குறித்து கிராம மக்களிடம் நேரடி கள ஆய்வு மூலம் விளக்கமளித்து, அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை தொடர வேண்டும்.
சீர்காழி அருகே சோலார் பவர் பிளான்ட் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிராமமக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனியார் சோலார் பவர் பிளான்ட்க்கு எதிர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழநெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரீட் ஓல்ட்ராஸ் என்று தனியார் நிறுவனம் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் அதற்கான தடவாள பொருட்களும் கொண்டுவந்து வைத்து பணிகளை செய்துள்ளது. இந்த சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவாகவும், பெரும்பான்மையானோர் எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இதனால் கீழ நெப்பத்தூர், மேல் நெப்பத்தூர், நெப்பத்தூர், திருநகரி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என கூறி இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை
இதனைத் அடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படமால் வண்ணம் வருவாய் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின்பு இது தொடர்பாக நிரந்தர தீர்வு காணப்படும் என அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்
இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடித்து தேர்தல் நடத்தை விதிகள் திரும்பெற்ற பின்னர் மீண்டும், சோலார் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும் என்றும், அதனை முழுமையாக தடுத்து நிறுத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று ஊர் மக்கள் ஒன்றுதிரண்டு, இதுதொடர்பாக கீழநெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுப்பட்டனர். கூட்டத்திற்கு அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்லப்பா, சி.பி.ஐ.எம்.எல். கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தனியார் சோலார் பவர் பிளான்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மக்களை திரட்டி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீண்டும் பேச்சுவார்த்தை
அதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்தவாரம் சீர்காழி கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அக்கூட்டத்திலும் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பிலும் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நெப்பத்தூர் கிராமத்தில் இருந்து 200-க்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பவர்பிளான்ட் நிர்வாகிகள் இத்திட்டத்தால் விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தன்னிலை விளக்கம் அளித்தனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத கிராமமக்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேளாண்மை அல்லாத எந்த திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சோலார் பிளான்ட் நிர்வாகிகள் தங்கள் திட்டம் குறித்து கிராமமக்களிடம் நேரடி கள ஆய்வு மூலம் விளக்கமளித்து, அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை தொடர வேண்டும். கிராம மக்கள் எதிர்ப்பை மீறி அங்கு சோலார் திட்டத்தை தொடரக் கூடாது என கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். தங்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாத நிலையில், அதனை மீறி, நெப்பத்தூர் கிராமத்தில் சோலார் திட்டம் செயல்படுத்தப்படாது என்பதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இக்கூட்டத்தில், கோட்டாட்சியர் அர்ச்சனா, டிஎஸ்பி ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.