மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்புக்கு தொடரும் எதிர்ப்பு - வலுக்கும் போராட்டம்....!
மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் மற்றும் ரூரல் ஊராட்சி ஊராட்சிகளை இணைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் மற்றும் ரூரல் ஊராட்சி ஊராட்சிகளை இணைப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்வு
சமீபத்தில் தமிழகம் முழுவதும் பல நகராட்சிகள் மாநகராட்சிகளுடனும், ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைந்து மக்கள் தொகை அடிப்படையில் அதன் பரப்பளவு அதிகப்படுத்திட அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்ட பிறகு மன்னம்பந்தல் ஊராட்சி பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் சூழலில், மணக்குடி ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகிறது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் நகராட்சி வார்டுகள் விரிவாக்கம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மயிலாடுதுறை நகராட்சி தற்போது 36 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் வார்டுகளை அதிகரிக்க உள்ளனர்.
பல்வேறு வகையில் எதிர்ப்பு
அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைப்பதற்கான ஆணை வெளியாகியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சி பகுதிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிகளை சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டங்களில் ஒன்றாக தங்கள் எதிர்ப்பை கடந்த கிராம சபை கூட்டத்தில் இணைப்புக்கு எதிராக தீர்மானம், ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா மனு உள்ளிட்ட போராட்டங்களை செய்து வருகின்றனர்.
கருப்பு கொடி கட்டி காத்திருப்பு போராட்டம்
தொடர்ந்து தற்போது தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், தங்க கிராமத்தில் தகர சீட்டாலான கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அக்கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் தன்ராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு சுமூக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், அவற்றை ஏற்க கிராம மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து நிலையில் கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Credit Card: பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டை மூடலாமா? தொடரலாமா? நன்மை, தீமைகள் என்ன?