(Source: ECI/ABP News/ABP Majha)
TN Cabinet Meeting: புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் - துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்?
TN Cabinet Meeting: தமிழ்நாடு அரசின் மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையின், முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
TN Cabinet Meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி, செந்தில் பாலாஜி, கோ.வி. செழியன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இணைப்பு மற்றும் அமைச்சர் பொன்முடி போன்றோருக்கு துறை மாற்றம் என, தமிழக அமைச்சரவையில் கடந்த மாதம் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளது. காலை 11 மணியளவில் தலைம செயலகத்தில் நடைபெற உள்ள, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை கூட்டம் எதற்கு?
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அதேபோல, ஒன்றரை ஆண்டுகளில் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து எஸ்எஸ்ஏ திட்டத்திற்கான நிதி பெறுவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம். அமலாக்கத்துறை மூலம் அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழுத்தம் அளிப்பதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை
குறிப்பாக தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் விவாதிக்கபப்ட உள்ளது.
உதயநிதிக்கு கூடுதல் அதிகாரமா?
முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நீக்கப்பட்ட அமைச்சர்கள்:
முன்னதாக பால்வள அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், சிறுபான்மையின நல அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், வன அமைச்சராக இருந்த கே.ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட நாசர், செந்தில் பாலாஜி, கோ.வி. செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரும் இன்று அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர். ராமச்சந்திரன் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.